வெள்ளி, 17 ஜனவரி, 2014

தாய் மொழி வழி கல்வி !


தாய் மொழி வழி கல்வி:

ஆங்கில வழி கல்வியை ஆதரிக்கவும், எதிர்க்கவும் நியாயமான கோரிக்கைகைகளை அல்லது உதாரணங்களை முன் வையுங்கள்,நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அதை விடுத்து, என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவன், ஆங்கிலம் புரியாமல் தன் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவிட்டான், அதற்கு காரணம் அவன் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் வழி கல்வி கற்றதனால் தான் என்று அவதூறு எழுதாதீர்கள். 

சென்னையில் பொறியியல் படித்த ஒரு சில முதலாமாண்டு மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால், தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கு காரணம் அவர்கள் தாய்மொழி வழி கல்வி தான் என்று தமிழ் வழி கல்வியை அவமானம் செய்யாதீர்கள்.

நீங்கள் சொல்வதை போன்ற குற்றசாட்டுக்களை ஆங்கில வழி கல்வியில் படித்தவர்கள் மீதும் வைக்க இயலும்.

பள்ளி கல்வியை ஆங்கில வழியில் படித்து,பொறியியல் கல்லூரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களையும், அதை போலவே பட்டப்படிப்பை ஒழுங்காக முடிக்காமல்,கல்லூரியை விட்டு விலகி சென்ற மாணவர்களையும் நாம் அறிவோம். அப்படியானால் ஆங்கில வழி கல்வி தவறு என்று சொல்லி விடலாமா?

ஆங்கிலம் புரியாமல், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தடுமாறும் மாணவர்கள் அதற்காக தற்கொலை செய்வது என்பது பயித்தியக்காரத்தனம்.

இந்த மாதிரி மாணவர்களின், அடிப்படை சிக்கல் என்னவென்றால் மொழி என்ற சிக்கலை தாண்டி, சின்ன சின்ன தோல்விகளை எதிர்கொள்ளும் திராணி இல்லாதததும்,வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றிய சரியான புரிதல் இல்லாததும்,தன்னம்பிக்கை இல்லாததும் தான்.

ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்த மாணவன்,தான் விரும்பிய மருத்துவம் கிடைக்காது என்பதற்காக தற்கொலை செய்து கொள்வதும் இந்த ரகம் தான்.

பள்ளிகல்வியை தாண்டாத பல சாதனையாளர்களை குறித்து படித்திருக்கிறோம்(காமராசர்), தொடர் தோல்விகளை சந்தித்த அறிவியலாளர்கள்(எடிசன்) பின்னாளில் வெற்றி பெற்ற எண்ணற்ற சம்பவங்கள் குறித்து படித்திருக்கிறோம்.விரும்பிய பாடம் கிடைக்காமல், கிடைத்த பாடத்தை விரும்பி படித்து சாதனைகள் நிகழ்த்திய பலரின் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.

ஆனால் வெற்றியாளர்களின்,சாதனைகளையும்,சோதனைகளையும் படித்த நம் மாணவர்கள்,அதே தோல்விகள் தங்கள் வாழ்வில் வரும் போது மட்டும், அதை எதிர் கொள்வதற்கு பதிலாக,தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு பதிலாக், தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு, அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை தான் நாம் வளர்க்க வேண்டுமேயன்றி, ஒட்டு மொத்த ஆங்கிலமும் தவறு என்றும், ஆங்கிலமே வேண்டாம் என்றும் வாதிட இயலாது.

மருத்துவம் கிடைக்கவில்லையா, பரவாயில்லடா தம்பி மருத்துவம் சார்ந்த வேறு துறைகளோ, அல்லது அதற்கு அடுத்த படியாக உனக்கு பிடித்த பாடங்களையோ எடுத்து படிக்கலாம்,இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று ஆறுதல் சொல்லி, அவனை பக்குவப்படுத்த வேண்டுமேயன்றி,அதையும் மீறி தற்கொலை செய்த மாணவனுக்காக ஒட்டுமொத்த பாடத்திட்டத்தையும் குறை சொல்ல முடியாது.

மாணவர்களை பக்குவப்பட்டவர்களாக மாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.ஆனால் பல நேரங்களில் பெற்றோர்களுக்கே,தங்கள் பிள்ளைகளின் சின்ன சின்ன தோல்விகளை ஏற்கும் பக்குவம் இல்லை. மன அழுத்தமானது, பல நேரங்களில் பெற்றோர்களிடம் இருந்தே பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றது.

என்னைப் போலவே பள்ளிகல்வியை தமிழ் வழி கல்வியில் படித்த பல நண்பர்கள், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிரமப்பட்டோம். மறுக்கவில்லை. ஆசிரியர்கள் பேசுவதை புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. காரணம் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ் வழி கல்வியில் படித்துவிட்டு, திடீரென்று ஆங்கில வழி என்றதும் கொஞ்சம் சிரமம் தான்.

ஆனால் அதற்கு காரணம் எங்களின் ஆங்கில மொழி புலமையில் இருந்த குறைபாடு தானேயன்றி,ஆங்கில வழி கல்வி என்று ஒருபோதும் சொல்ல முடியாது. ஆனால் இரண்டாம்,மூன்றாம் ஆண்டுகளில் அந்த சிரமம் இல்லை. ஆங்கில மொழிப் புலமையை வளர்க்க, தொடர்ந்து கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும் அவ்வளவே. எந்த அளவு சிரத்தை என்பது ஒவ்வொருவரின் தேவையை பொறுத்தது.

இன்றைக்கு தமிழ்வழியில் படித்த நண்பர்களும்,ஆங்கில வழி கல்வி படித்த மற்றவர்களோடு போட்டி போட்டு கொண்டு, உலகின் முன்னணி நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். ஜெயித்திருக்கிறார்கள்.

தமிழ் வழியில் படித்த அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பெரிய பெரிய உதாரணங்களை விட, நம்மோடு கூடவே இருந்து வெற்றியை தொட்டவர்களின் உதாரணங்கள் என்றுமே நெகிழ்வானவை.

வளர்ச்சி என்பது பல நேரங்களில் தகவல் தொழில் நுட்ப துறையில் பெற்ற வெற்றியையும், அமெரிக்காவில் வேலை செய்கிறார்களா என்பதையும் பொறுத்தே பலரால் பார்க்கப்படுகிறது(எனக்கு உடன்பாடு இல்லை). அதற்காக சொல்கிறேன்.

இன்று மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆப்பிள் என்று எந்த முன்னணி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எடுத்துக்கொண்டாலும்,தமிழ் வழியில் படித்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தில்,ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறார்கள்.

இந்திய அரசு துறையை பொருத்தவரை இஸ்ரோ, டி.ஆர்.டி.ஒ என்று முன்னணி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

ஏன் அவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்து சாதிக்கவில்லையா?

அரசு கொண்டு வரும் ஆங்கில வழி கல்வி தேவை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அதற்காக தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் எல்லோருமே தோற்றுப்போகிறார்கள் அல்லது தோற்று போன பலரின் பின்னால் தாய் மொழி கல்வி தான் என்ற மாயத் தோற்றத்தை மட்டும் உருவாக்காதீர்கள். தமிழ் வழி கல்வியில் படித்து வாழ்க்கையில் வெற்றிபெற்ற பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

-ஆன்டனி வளன்

 மே 20,2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக