புதன், 15 ஜனவரி, 2014

விசா முறைகேடு - தேவயாணி



விசா முறைகேடு செய்ததற்காக கைது செய்யப்பட வேண்டியது தேவயாணி மட்டும் தானா?

உலகநாடுகள் பலவும், ஒரு ஊழியர் தன் நாட்டில் பணி புரிய வர வேண்டுமானால்,அவர்களது சம்பளம் இவ்வளவு இருக்க வேண்டும்,அப்படி இருந்தால் மட்டுமே விசா வழங்குவேன் என்று விதிமுறை வைத்து இருக்கிறது! இதை அங்குள்ள பொருளாதார மற்றும் பல்வேறு காரணிகளை முன்வைத்து அவர்கள் நிர்ணயித்து இருக்கிறார்கள்.இதை சரியா தவறா என்பதை முடிவு செய்ய வேறு எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது!

இந்தியாவைப் பொறுத்த வரையில் இது அந்நிய நாட்டு பிரச்சினை அல்லது அந்தந்த நாட்டு சட்ட திட்டங்கள். அதில் கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை!

மேலை நாடுகளில் பணியாளர்களுக்கான சட்ட ஒழுங்குகள் என்பது மிக மிக கடினமானவை. ஆனால் அந்த சட்ட திட்டங்களிலும் கோல்மால் செய்யும் நிறுவனங்களும் இருக்கிறது. என்ன ஒன்று அவை அரசாங்கத்து தெரியாமல் இருக்கும் வரை பிழைக்கும்! தெரிந்தால் கதை அம்பேல்!உதாரணமாக அமெரிக்காவில் ஒரு ஊழியருக்கு குறைந்த பட்ச சம்பளம் என்பது ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது!

தற்போது பத்து டாலராக இருக்கும் என்பது என் கணிப்பு! எந்த நிறுவனமும் இதற்கு குறைவாக சமபளம் கொடுக்க முடியாது.அப்படி கொடுத்தால் கடும் நடவடிக்கைகளை இன்னும் சொல்லப் போனால் பணியாளர் சம்பள முறை கேடுகள் என்றால் அபராதங்கள் எல்லாம் சில/பல லட்சம் டாலர்களுக்கு குறைவதில்லை!

அந்த அளவுக்கு கடுமை காட்டுவார்கள்.ஆனால் நம் நாட்டில் பணியாளர்களுக்கான ஒரு நாளுக்கோ அல்லது மணிக்கோ குறைந்த பட்ச சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்க பட்டு இருக்கிறதா,அதை அரசாங்கம் கண்காணிக்கிறதா,அல்லது அதை வெகுஜன மக்கள் அறிவார்களா என்பது எனக்கு தெரியவில்லை. கட்டாயம் பலருக்கு தெரிந்திருக்குமா என்பது கூட சந்தேகமே!

ஆனால் உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து பணிபுரியும் அதிலும் குறிப்பாக நம் இந்திய மக்களில் பலர் பலசரக்கு கடைகள் வைத்து இருப்பார்கள். உணவு விடுதிகள் நடத்துவார்கள்.அப்படியான இந்தியர்கள் பலரை பார்த்ததுண்டு! இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அரசின் விதிப் படியான சம்பளம் கிடையாது! முதலாளிகள் என்ன சம்பளம் என்று பேசுகிறார்களோ,அதை மட்டுமே கொடுப்பதுண்டு. அதற்கு ஆவணங்கள் கிடையாது!பல நேரங்களில் அரசாங்கம் விதித்து இருக்கும் மணிக்கு ஆறு டாலர் அல்லது பத்து டாலர் என்பதற்கு பதிலாக இவர்களாக ஐந்து டாலர் ஆறு டாலர் என்று சம்பளம் தருவதுண்டு! இது அங்கு நாம் பார்க்கும் சாதாரண அளவிலான கோல்மால்கள்.

இதையெல்லாம் பரிசோதிக்க அமெரிக்க அதிகாரிகள் கடைகளுக்கும்,உணவு விடுதிகளுக்கும் அவ்வப்போது வந்து போவதுண்டு.ஒருவேளை முறைகேடுகள் என்றால் எவ்வித சமரசமும் இன்றி உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கொடுத்து சரி செய்து விடலாம் என்று எண்ணினால் களி தான்:)

அட்லாண்டாவில் பணியாற்றிய ஒரு மாதம், அன்றாடம் சரவண பவன் உணவகத்தில் தான் எங்கள் சாப்பாடு! அங்குள்ள ஊழியர்கள் பலரை நன்றாக தெரியும். திடீரென்று ஒருநாள் ஊழியர்களில் பாதி பேரை ஆளைக் காணோம். என்னவென்று கேட்டால், மேலாளர் எதோ தயங்கி தயங்கி தகவல் ஒன்றை சொன்னார். அதாவது தங்கள் சரவண பவன் நிறுவனம் விசா முறைகேட்டில் சிக்கி இருப்பதால்,இங்கே ஊழியர் பலருக்கு சிக்கல் என்றும் அதனால் தான் பலர் இன்று வரவில்லை என்றும் சொன்னார். அந்த நேரத்தில் செய்தி தாள்களில் பார்த்தால், சரவண பவன் ஊழியர்கள் பலர் விசா முறைகேடு செய்திருப்பதாகவும், அதற்காக அதன் நிறுவனத் தலைவர் அய்யா ராஜகோபால் அவர்களின் புதல்வர் அவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டதும் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்!

இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் நம் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் பற்றி தனிப் புத்தகமே போடலாம்!

தன் வீட்டு வேலைக்கு சேர்த்த பணிப் பெண்ணின் விசாவில் தேவயாணி முறைகேடு செய்திருப்பதைப் போல,இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இதையே தான் செய்கின்றன.ஆவணப்படி,விசா அதிகாரிகளுக்கு கொடுக்கும் படிவத்தில்,ஊழியர்களுக்கு ஒரு சம்பளத்தை எழுதி இருப்பார்கள். காரணம் அந்த சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தால் தான் விசா கொடுப்பான் வெள்ளைக்காரன். அதனால் அங்கே பொய் சொல்லி விடுவார்கள்.ஆனால் பணி புரியும் பொறியாளருக்கோ சொல்லப்பட்ட சம்பளத்தில் பாதியைகொடுப்பார்களா அல்லது பாதிக்கு குறைவாக கொடுப்பார்களா என்பது அந்தந்த நிறுவனத்துக்கே வெளிச்சம்!

நான் பார்த்த வரையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் செய்யும் அட்டூழியங்களை விட,அமெரிக்காவில் செய்யும் சம்பள முறைகேடுகள் கொஞ்சம் குறைவு என்றே சொல்லலாம்(அனுபவ ரீதியாக எனக்கு தெரிந்த வரையில்).

இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் புகுந்து விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் தங்கள் மாத வருமானத்தை அமெரிக்க அரசின் சம்பள படிவ வடிவில் தான் கட்டாயம் பெறுவார்கள்.அதன் மூலம் நீங்கள் வாங்கும் சம்பளம் அமெரிக்க அரசுக்கு தெரியப் படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதாவது சம்பளம் சார்ந்த விடயங்களுக்கு,அமெரிக்காவின் அரசு சார் இணைய தளங்களில் அதை நீங்கள் உறுதி படுத்திக் கொள்ளலாம். அந்த சம்பள படிவங்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.அமெரிக்க அரசின் முத்திரை சார் விடயங்கள் அதை உறுதிப் படுத்தும். இவை அனைத்தும் வெளிப்படையானவை!

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் அந்த அளவுக்கு கெடுபிடி இருப்பது போல் எனக்கு தெரியவில்லை.அல்லது கட்டாயம் கெடுபிடி இருக்கலாம். ஆனால் அதை இந்திய நிறுவனங்கள் தங்கள் கோல்மால்கள் மூலம் சரிக்கட்டுகிறார்கள்.பணி புரியும் பொறியாளர்களுக்கு ஐரோப்பிய அரசில் தங்களுக்கு என்ன சம்பளம் தருவதாக பொய் சொல்லுகிறார்கள் என்ற தகவல் தரப் படுவதில்லை.மாறாக ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் மாதம் ஒரு சம்பள பட்டியலை அவர்களுக்கு அனுப்பும்.அதில் ஒரு குறிப்பிட்ட சம்பளம் சொல்லப்பட்டு இருக்கும். ஆனால் இவர்கள் அந்த நாட்டு அரசுகளுக்கு தங்கள் ஊழியருக்கு இருமடங்கு சம்பளம் தருவதாக பொய் சொல்லிக் கொண்டு அதற்கான போலி ஆவணங்களை காட்டிக் கொண்டு இருப்பார்கள்.

ஒட்டு மொத்த இந்திய நிறுவனங்கள் இப்படித் தான் என்று உறுதி பட சொல்ல இயலாது.ஆனால் பல முன்னணி நிறுவனங்கள் இந்த மோசடி செயல்களை செய்து வருகின்றன.அரசாங்கத்து கணக்கின் படியான சம்பள படிவத்தை பணியாளர் கேட்டால், ஒரு போதும் பதில் வராது. இறுதி வரை தரமாட்டார்கள். வெளிப்படைத் தன்மை எங்கு இல்லையோ,அங்கே மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்! இந்த செய்திகளை கிட்டத் தட்ட உறுதியும் செய்து விட்டேன்.ஆம் இந்த நிறுவனங்கள் இப்படியான மோசடிகளை பல நாடுகளில் காலம் காலமாக செய்து வருகின்றன. அந்தந்த நாட்டு ஊழியருக்கான சட்ட விதிகளை முறையாக மதிப்பதில்லை.

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்களை,கூடுமானவரையில் இந்தியாவில் உள்ள சூழலைப் போலவே நடத்த முற்படுகின்றன என்பது தான் உண்மை.வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களில்,பணி புரியும் வெளிநாட்டவரை அப்படி நிர்பந்திப்பது இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்! காரணம் அப்படி செய்ய முயற்சிக்கும் பட்சத்தில், ஆப்பை நாமே தேடிப் போய் அமர்வதற்கு சமம் என்பதை இந்திய நிறுவனங்கள் நன்றாகவே அறியும்!

ஒரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்! ஜெர்மனியில் உள்ள இன்போசிஸ் ஊழியர் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்!வழக்குக்கு முன்பு என்ன நடந்தது என்றால், ஒரு சனிக் கிழமை/ஞாயிற்றுக் கிழமை அன்று கட்டாயம் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அந்த ஊழியரின் மேலாளர் அவனுக்கு அலை பேசியில் சொல்லி இருக்கிறார்.பையன் வாரக் கடைசியில் நண்பர்கள் பலரோடு சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருப்பான் போலும். அவனுக்கு கடுப்பு தாங்கமுடியவில்லை.தனது மேலாளரை பொறியில் சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி விட்டான். சார் நீங்கள் என்னிடம் அலைபேசியில் சொன்ன தகவலை, ஒரு ஈமெயில் அனுப்ப முடியுமா என்று நைசாக கேட்டு இருக்கிறான்.

மேலாளர் என்ன நினைத்தாரோ, ஈமெயில் தானே அனுப்பிட்டா போச்சு என்று ரொம்ப சாதாரணமாக சனிக்கிழமை/ஞாயிற்றுக் கிழமை அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று ஈமெயில் அனுப்பி இருந்திருக்கிறார். பையனுக்கு இந்த ஈமெயில் தான் வழக்கு தொடர சாதகமாக இருந்த ஆவணம்.என்ன சொல்லி வாதாடினார்களோ தெரியவில்லை. ஆனால் இந்திய பணத்தில் ஒரு கோடிக்கு மேல் இன்போசிஸ் நிறுவன் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதை அந்த ஊழியருக்கு தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது ஜெர்மனி நீதிமன்றம்.! சந்தோசமா கோடிகளை வாங்கிக் கொண்டு நிறுவனத்தை விட்டு நகர்ந்து விட்டான் பையன். இது பத்திரிக்கைகளில் வந்த செய்தி!

இத்தனைக்கும் ஜெர்மனியில் பணியாளர் நலன்களுக்கான மிகக் கடுமையான சட்டங்கள் உண்டு.ஆனாலும் இந்திய நிறுவனங்கள் பல,அவற்றை கடை பிடிப்பதில்லை. இந்திய நிறுவனங்கள் மட்டும் தானா என்பது எனக்கு தெரியவில்லை.வேறு நாடுகளும் இப்படி இருக்க வாய்ப்புண்டு.

எதற்காக சொல்கிறேன் என்றால், ஊழியர்களின் சம்பளத்தில் மட்டுமே இந்திய நிறுவனங்கள் கோல்மால் செய்வதில்லை,மாறாக உலக நாடுகளில் உள்ள பணியாளர் நலன்களுக்கான விதிமுறைகள் பலவற்றையும் கூட நம் இந்திய நிறுவனங்கள் முறையாக கடை பிடிப்பதில்லை என்பதே எதார்த்தம்!

இப்படி எல்லாம் இருந்தும் பிறகெதற்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்கிறீர்கள், அல்லது வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! மான்ஸ்தனா இருந்தா போகக் கூடாது தான்! இருந்தாலும் பலருக்கு குடும்ப சூழல் மற்றும் தேவைகள்!

இறுதியாக சொல்லவரும் செய்தி என்னவென்றால் இந்த விசா மோசடியில் சிக்கினது என்னவோ தேவயானியா இருந்தாலும் கூட, இன்னும் மேலை நாட்டு நிறுவனங்கள் கொஞ்சம் சல்லடை போட்டு துழாவினால்,பல பெரும் நிறுவன தலைவர்களும், மென்பொருள் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

ஊழியர்களின் நியாயமான வருமானத்தை ஏமாற்றி சுரண்டி கொழுக்கும் பெரும்முதலாளிகளுக்கு,கைவிலங்கு மட்டுமல்ல கால் விலங்கும் சேர்த்தே மாட்டி இழுத்து சென்றால் விசிலடிச்சு கைதட்டலாம்!

ஊழியர்களின் சம்பளங்களை அநியாயமாக சுரண்டி, தங்கள் லாபத்தை பல மடங்கு உயர்வாக காட்டும்,இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களும்,அதன் தலைவர்களும் ஊருக்கு நல்லது செய்வதற்காக வழங்கும்,பல கோடி ரூபாய்கள் என்பது உண்மையான தானம் தானா அல்லது வெற்று விளம்பரத்திற்கா என்பது சந்தேகத்துக்கு உரிய கேள்விக் குறியே!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக