வியாழன், 16 ஜனவரி, 2014

எனது பார்வையில் ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்த்!


எனது பார்வையில் ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்த்!

கடந்த பல ஆண்டுகளாகவே ஜோ.டி.க்ரூஸ் அவர்களின் பல்வேறு காணொளிகள்,கட்டுரைகள், எழுத்துக்கள்,மேடைப் பேச்சுக்கள் போன்றவற்றை மிக மிக உன்னிப்பாக கவனித்து வந்த அடிப்படையில்,என்னுடைய புரிதலை இங்கே தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்! 

இது குறித்த மேலோட்டமான பதிவு ஒன்றை,சில வாரங்களுக்கு முன்பே முகநூலில் எழுதி இருக்கிறேன்.இன்றைய(03.01.2014)ஆனந்த விகடனுக்கு அவரளித்த பேட்டியில், சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையா,இல்லையா என்பதை உறுதிப் படுத்த வேண்டிய கடமை எனக்குண்டு!

காரணம் கத்தோலிக்க கிறித்துவம் கள்ள மௌனம் காக்கிறது என்றும்,கிறித்துவம் தான் கடற்கரை சமூகத்தை சிதைத்து விட்டது என்றும்,தொடர்ந்து இந்துத்வ மேடைகளில் நின்று கொண்டு அவர் கூறி வரும், அவதூறுகளை மறுக்க வேண்டிய கட்டாயம், கிறித்துவத்தின் பல்வேறு நலன்களை அதிலும் மிக குறிப்பாக கல்வியை அனுபவித்த என் போன்றவர்களுக்கு உண்டு!

கத்தோலிக்க கிறித்துவத்தை கடுமையாக விமர்சிக்கிறீர்களே என்ன காரணம் என்ற கேள்விக்கு, நான் இப்போதும் கத்தோலிக்க கிறித்துவனாகவே வாழ்ந்து வருகிறேன்.ஆனால் நான் என் கடல் தெய்வமான குமரித் தாயை வணங்குவேன்,என் மூதாதையர்களை வணங்குவேன் என்றும் பதிலளித்து இருக்கிறார்.விகடன் பேட்டியில் அவரது பதில் கொஞ்சம் சுருக்கமாக இருந்தாலும் கூட, இதே கேள்விக்கு அவர் பல்வேறு தருணங்களில் சொன்ன பதில்களையும்,சேர்த்தே நினைவு படுத்த விரும்புகிறேன்.

அதாவது குமரித்தாய் என்று மட்டுமல்ல, சிவனை வழிபடுவேன், முருகனை வழி படுவேன், முப்பத்து முக்கோடி தேவர்களை வழி படுவேன்,காரணம் எனது முந்தைய அடையாளம் நான் ஒரு இந்து. ஆதலால் இவர்களை எல்லாம் நான் வழிபடத்தான் செய்வேன். அது தவறில்லை. எனக்கு புதிதாக எந்த வெளிநாட்டு கடவுளும் தேவை இல்லை என்று பலமுறை சொல்லி இருக்கிறார்.

சமீபத்திய(நவம்பர்)உலக மீனவர் நாள் நிகழ்வுக்கு,இவர் அளித்த ஒரு பேட்டியில் ஒண்ட வந்தா பிடாரி,ஊர் பிடாரியை விரட்டியதாம் என்றும்,எனக்கு புதிதாக வெளிநாட்டு கடவுள் எதற்கு,இங்கே என் தேவைக்கு அதிகமான கடவுள்கள் எனக்கு இருக்கிறார்கள் என்றும் பேசிய ஆதாரங்கள் எல்லாம், வேண்டும் என்று கேட்பவர்கள் என்னை அணுகலாம்.

ஆக எல்லா கடவுள்களையும் நான் வணங்குவேன் என்று மேடை தோறும் பேசும் ஒரு மனிதன், இன்றைய பேட்டியில் நான் இன்றும் கத்தோலிக்க கிறித்துவனாகவே வாழ்கிறேன் என்று சொல்கிறார் என்றால்,அவரது பேச்சில் இருக்கும் முரண்பாட்டை, பச்சோந்தி தனத்தை தோலுரித்துக் காட்ட வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.

அதாவது மதம் சார்ந்த இவரது பதில்கள்,மேடைக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறும் என்பது நான் உணர்ந்த ஒன்று. இந்துத்துவ மேடைகளில் தன்னை ஒரு இந்துவாகவும்,வெளி உலகுக்கு தான் ஒரு கிறித்துவன் என்றும், தான் கத்தோலிக்கத்தின் குறைகளை மட்டுமே கேள்வி கேட்கிறேன் என்பது போலவும் ரெட்டை வேடம் அணிகிறார்.

இங்கே எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்,எந்த கடவுளை வேண்டுமானாலும் வழி படலாம். தவறில்லை. ஆனால் நான் கிறித்துவன் தான், ஆனால் நான் அனைத்து கடவுள்களையும் வழி படுவேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் கிறித்துவத்தின் ஆதாரமாய் இருக்கும், வேதாகமத்துக்கு புறம்பாக பேசுகிறார், செயல்படுகிறார் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எல்லாரும் கடவுள், அப்படியே இயேசு நாதரும் ஒரு கடவுள் என்று சொல்பவன் கிறித்துவனே அல்ல என்பது தான் உண்மை. அதற்கு ஆதாரம் பரிசுத்த வேதாகமம்.என்னையன்றி வேறே தேவன் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்பது தான் கிறித்துவம் சொல்லும் போதனை. பல கடவுள்கள் என்று ஏற்பவர்கள் பற்றி நான் கருத்துக் கூறவில்லை. மாறாக கிறித்துவர்கள் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்களுக்கு, வேதாகமம் சொல்லும் சத்தியம் தெரியவில்லை என்பதே என் வாதம்.

பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பாகால்களை, உலோகங்களால் செய்த கன்றுக் குட்டியை, இயற்கையாம் சூரியனை,சந்திரனை, மழையை, இடியை, மின்னலை, காற்றை,கடலை,மூதாதையர்களை எல்லாம் கடவுளாக வழி பட்ட தன் சொந்த மக்களுக்கு,இறைவன் என்ன செய்தார் என்பதையும் சேர்த்தே படிக்க வேண்டும்.

ஆக இங்கே தான் கிறித்துவன் என்று சொல்லிக் கொண்டே, அல்லது அடையாளப் படுத்திக் கொண்டே,இயேசு நாதர் ஒரு போராளி, அவர் காந்தியை போல, நெல்சன் மண்டேலாவைப் போல, பிரபாகரனைப் போல என்று தவறான ஒப்பீடுகளை பலர்(குறிப்பாக கிறித்துவ அடையாளங்களை தங்கள் பெயர்களில் மட்டும் தாங்கி நிற்போர்) தருவதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.அப்படி செய்பவர்களை,வெகு ஜன மக்களில் ஒருவராக எண்ணி கடந்து சென்று விடுவதுண்டு.அவர்களை கிறித்துவர் என்று நான் ஒருபோதும் எண்ணுவதில்லை.

காரணம் கிறித்துவை மட்டுமே கடவுளாக ஏற்பவன் தான் கிறித்துவன் என்ற அடிப்படை கூட தெரியாத,அடையாள கிறித்துவர்களிடம் நான் எதையும் புரிய வைக்க இயலாது அல்லது எனக்கு அவர்களோடு விவாதிப்பதில் எந்த விருப்பமும் கிடையாது.

எனக்கு மற்ற மதங்களைப் பற்றி தெரியாது. ஆனால் வேதாகமம் தெரியும். மற்ற மதங்களைப் பற்றி அவதூறாக பேசத் தெரியாது. மற்றவர்களின் மத நம்பிக்கையை சிதைக்க தெரியாது. என் கடவுள் தான் சிறந்தவர் என்று எங்கும் விவாதிக்கக் வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அப்படியான விவாதங்களில் எனக்கு உடன்பாடும் இல்லை.அடுத்தவர் நம்பிக்கைகளில் நான் தலையிடுவதில்லை.மனிதர்களின் மத உணர்வுகளை காயப்படுத்த கூடாது என்பதில் உறுதியாய் நிற்பவன். எந்த மத குருமார்களையும் கேலி பேச முற்படாதவன்.

அதே நேரத்தில் நான் படித்த/படிக்கும் வேதாகமத்தை முழுமையாக நம்புகிறவன் நான். அதை ஒன்றிரண்டு முறைகளாவது முழுமையாக வாசித்தவன்.அன்றாடம் வேதாகமத்தை வாசிப்பதும், அதில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை, வேதாகமத்தை நன்கு கற்றுத் தேறிய போதகர்களிடம் தெளிவு படுத்திக் கொள்வதும் எனது வழக்கமான செயல்பாடு!

ஆக என்னைப் பொறுத்தவரையில் ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்த் தன்னை ஒரு கிறித்துவர் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலும் கூட, அவர் கிறித்துவத்தின் அடிப்படையை உணராதவர்.அதன் முழுமையான அர்த்தம் தெரியாதவர்.சங்க கால இலக்கியங்களை படித்த அளவுக்கு, வேதாகமத்தை அவர் வாசிக்கவில்லை என்பதற்கு அவரது பதிவுகள் மற்றும், செயல்பாடுகளே போதுமானது!

சரி அவர் கிறித்துவரா இருந்தா என்ன இல்லாவிட்டால் என்ன? அதுல என்ன சிக்கல்?

கிறித்துவர் அல்லாத ஒருவர், கிறித்துவத்தை விமர்சிக்கிறார் என்றால் அப்படியானவர்களை நான் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஜோ.டி.க்ரூஸ் அப்படி தன்னை ஒரு கிறித்துவன் அல்ல என்று நேர்மையாக ஒப்புக் கொண்டால், நான் அவரை கேள்வி கேட்க போவதில்லை.

மாறாக அவர் நின்று பேசும் மேடைகள் அனைத்தும் இந்துத்வா மேடைகள், ஆர்.எஸ். எஸ் அமைப்பை சேர்ந்தவர்களின் மேடைகள். அங்கே நின்று கொண்டு தன்னை கிறித்துவனாக அடையாளப் படுத்திக் கொண்டு, கிறித்துவத்தை அவதூறாக பேசுவது தவறு!காரணம் அவர் கிறித்துவரே அல்ல என்பது தான் நிஜம். ஆனால் அதை அவர் நேர்மையாக ஒப்புக் கொள்ளட்டும்.

கிறித்துவன் என்று தன்னை, பொய்யாக அடையாளப் படுத்திக் கொண்டே, கத்தோலிக்க கிறித்துவம் தான் இன்றைய மீனவ மக்களின் அத்தனை சிக்கல்களுக்கும் காரணம் என்பதைப் போல,அவர் பல இடங்களில் சொல்லி வருகிறார்.அதாவது தான் எதிர்ப்பது கத்தோலிக்கத்தின் கள்ள மௌனத்தை மட்டுமே என்கிறார்.

இன்றைய மீனவர்களின் பிரச்சினைகளில் கத்தோலிக்க கிறித்துவம் எதையும் செய்வதில்லை, எங்கள் அதிகாரங்களை பறித்தவர்கள் இவர்கள் தான்.எங்கள் கையில் வேதாகமத்தையும், தேவாலங்களையும் ஒப்படைத்து விட்டு,எங்கள் அதிகாரங்களை ஒழித்தவர்கள் இவர்கள்.அணு உலை சிக்கல், ராமேஸ்வரம் மீனவர் சிக்கல்களில் கிறித்துவம் எதையும் செய்யவில்லை என்று பேட்டியில் சொல்கிறார்.

கிறித்துவம் முழுக்க முழுக்க கெடுதல் செய்து விட்டதாக எங்கு போனாலும் புலம்பும் இவர், எந்த பள்ளியில் படித்தார்,எந்த கல்லூரிகளில் படித்தார் என்பதையும் சேர்த்தே கணக்கிடலாமா?

தமிழ்நாட்டின் மிக சிறந்த கல்வி நிறுவனங்களில் பல, சிறுபான்மை கிறித்துவர்களால் தான் நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்கள், பாளை சவேரியார் கல்லூரி, திருச்சி தூய வளனார் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி! இதில் அமெரிக்கன் கல்லூரி மட்டும் கிறித்துவத்தின் மற்றொரு பிரிவினரால் நிர்வகிக்கப் படுகிறது! மற்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும்,கத்தோலிக்க கிறித்துவர்களால் நிர்வகிக்கப் படுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்,தமிழ்நாட்டின் மிக சிறந்த கல்லூரிகளாக இவை இருக்கின்றன என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.மிகச்சிறந்த கல்வியாளர்களை,அறிவியலாளர்களை,விஞ்ஞானிகளை,கலைத்துறை மேதைகளை,
தேசத்தின் தலைவர்களில் பலரை உருவாக்கிய பெருமை இந்த கல்லூரிகளுக்கு உண்டு.

இந்த கல்லூரிகளில் படிப்பவர்கள், படித்தவர்களில் பலர் நல்ல வசதி படைத்தவர்கள்,
பெரிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இப்படிப் பட்ட மிகச் சிறந்த, அதே வேளையில் போட்டி மிகுந்த கல்லூரிகளில் எல்லாம், நெய்தல் நிலத்தை சேர்ந்த பல பிள்ளைகள் படித்து வெளியே வந்திருக்கிறார்கள்.உயர்ந்த நிலைகளில் இன்று உலகை சுற்றி வருகிறார்கள்.

நெய்தல் நிலத்து மக்களுக்கு இந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க மதிப்பெண் மட்டுமே ஒரு காரணமா என்றால் கட்டாயம் இல்லை.சமவெளி சமூகங்களை சேர்ந்த எத்தனையோ பிள்ளைகள், நெய்தல் மக்களை விட கல்வியில்,மதிப்பெண்ணில் முன் இருந்தாலும்,மிகவும் பின்தங்கிய நெய்தல் நிலத்து மக்களுக்கு, இந்த கல்லூரிகள் இடமளிப்பதற்கு காரணம்,
பின்தங்கிய இந்த சமூகத்தை மேல் நோக்கி நகர்த்த வேண்டும் என்பதும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நெய்தல் மக்கள், மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த போதிலும், இந்த கல்லூரிகளில் நல்ல பல பாடங்களை எடுத்து படித்து தேறினார்கள், அப்படியான பலரை நேரடியாகவே நானறிவேன்!

லயோலா கல்லூரியிலும்,தூய வளனார் கல்லூரியிலும் அறிவியல் பாடத்துக்காக, மிகப்பெரும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை எல்லாம் வாங்கி சென்ற சம வெளி சமூக மக்களில் பலரை நானறிவேன்.ஆனால் அப்படிப்பட்ட போட்டிகளுக்கு மத்தியில்,எந்த அரசியல் தலைவர்களின் பரிந்துரை கடிதங்கள் எதுவும் இன்றி,நெய்தல் மக்களில் பலர் இந்த கல்லூரிகளில் படித்தார்கள் என்றால் அது கிறித்துவத்தின் நன்மையா தீமையா?

ஏன் ஜோ.டி.க்ரூஸ் அவர்களும் இந்த கல்லூரிகளில் எல்லாம் படித்தவர் தானே! கிறித்துவம் எங்களை, எங்கள் அதிகாரங்களை எல்லாம் சிதைத்தது என்று சொல்லும் இவர் படிக்க தமிழ்நாட்டில் வேறு கல்லூரிகளே இவர் கண்ணுக்கு தெரியவில்லையா, அல்லது கிடைக்கவில்லையா? எது தடுத்தது இவரை?தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு, நன்றி மறந்து பேசும் இவரது வார்த்தைகள் நியாயமானவை தானா?

கடலோர மக்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களில், பள்ளிகளை கட்டியதும், கல்வி கொடுப்பதும்,மருத்துவமனைகளை கட்டியதும்,முதியவர் இல்லங்கள்,கைவிடப் பட்ட குழந்தைகளுக்கான ஆசிரமங்கள் கட்டி பாதுகாப்பதும் கிறித்துவம் தான்! கிறித்துவம் வந்திருக்காவிட்டால், இப்படியான கல்வி வாய்ப்புகள் நெய்தல் மக்களுக்கு கிடைத்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி!

இன்னும் கூட பள்ளிகள் இல்லாத, சம வெளி சமூக ஊர்கள் ஏராளம் உண்டு. ஆனால் நெய்தல் ஊர்களில் பள்ளிகளுக்கு குறைவில்லை. கல்லூரிகளுக்கு குறைவில்லை.

கல்வி மட்டுமா? என்றால் இல்லை. அதைத்தாண்டி மருத்துவம், பல்வேறு விழிப்புணர்வு,

தொழில்சார் கல்விகள், மீனவர்களுக்கென்று பொருளாதார உதவிகளை எல்லாம் கிறித்துவம் முற்காலங்களில் செய்யாமல் இல்லை. மறுக்க இயலுமா?

ஐநூறு வருடங்களுக்கு முன்பு உள்ள வரலாற்று கதைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசி, நாங்கள் நாடு ஆண்டவர்கள், எங்கள் அதிகாரங்கள் பறி போயின என்று சொல்லும் போதே,மற்ற சமூகங்களும் இந்த ஐநூறு ஆண்டுகளில்,மன்னராட்சி முறைகளில் இருந்து வெளியே வந்து, ஜனநாயகத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்தாயிற்று. இந்த மாற்றம் நெய்தல் மக்களுக்கு மட்டுமே ஏற்படைவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த நகர்வில் தான் இருந்திருக்கிறார்கள்.
சரி கிறித்துவர்களாக மாறிய நெய்தல் மக்கள் தங்கள் அதிகாரங்களை இழந்தார்கள் என்றால், கிறித்துவத்தை ஏற்றுக் கொண்ட சமவெளி சமூகங்கள் இன்னும் அதிகாரத்தில் இல்லாமல் இல்லையே. அப்படி எத்தனை பேரை நான் உதாரணம் காட்ட வேண்டும்? இதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை !

மீனவர்களின் பிரச்சினைகளில் கத்தோலிக்க மதம் அமைதி காக்கிறது என்று க்ரூஸ் சொல்வதை ஒருவகையில் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் கூட,அதற்கு மாற்றாக அவர் சொல்லும்,தாய் மதத்துக்கே திரும்புவது தான் தீர்வைத் தரும் என்ற கூற்றில்,உண்மையோ,நியாயமோ இருக்கிறதா என்றால் கட்டாயம் இல்லை.

இந்துக்கள் கொல்லப்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த இந்துக்களும்,அல்லது இந்து மதமும் கொதித்து எழுகிறதா அல்லது ,மௌனம் காக்கிறதா என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். சில லட்ச தமிழ் இந்துக்களை,பௌத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்கள் கொன்ற போது, இந்தியாவில் இருந்த இந்து மதமோ, ஆர்.எஸ். எஸ் அமைப்போ என்ன செய்தது? அதே கள்ள மௌனம் தான். ஏன் பரமக்குடி, தருமபுரி கலவரங்களில் பாதிக்கப்படும் மக்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,இந்து மதம் என்ன செய்தது? நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் அப்படித் தான். ஆக ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்த் தீர்வாக சொல்லும்,இந்து மதம் மட்டும் வாய் திறந்து பேசி இருக்கிறதா?இல்லை.எல்லா மதத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது என்பது தான் உண்மை.

ஈழப் படுகொலைகளுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் வாய் திறந்து பேசியது உண்டா? போராட்டங்கள் எதையாவது செய்ததுண்டா என்றால் இல்லை!

கூடங்குளம் அணுஉலை சிக்கலில், நெல்லை மாவட்ட ஆட்சியாளரை சந்திக்க சென்ற நெய்தல் நிலத்தின் பெண்களை அடித்து துன்புறுத்தியது யார்? அந்த பெண்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய அமைப்புகள் யார் யார் என்பதையும் ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்த் சிந்தித்து பார்க்க வேண்டும்!ஒருவேளை அவர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னால் நான் தெளிவு படுத்துகிறேன்.

வட மாநிலங்களில் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட பாதிரியார்கள், கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட அருட்கன்னியர்களுக்கு என்ன பதில் சொல்வார் ஜோ.டி.க்ரூஸ்? அதை செய்தது யார்?

தமிழ்நாட்டின் மண்டைகாட்டு கலவரம், இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்களின் கொடூரமான படுகொலைகளை செய்தது யார்?

இன்றும் கூட இந்து கோயில்களில்,அனைத்து சாதி இந்துக்களும் சரி சமமாக நுழைய முடியாத படி தடை செய்து வைத்திருப்பது எது? என்றெல்லாம் க்ரூஸ் அவர்கள் சிந்திப்பது நல்லது!

இங்கே யார் என்ன மதம் என்பதை விட, என்ன சாதி, உயர்ந்த சாதியா, தாழ்ந்த சாதியா என்பது தான் முன்னோக்கி நிற்கிறது!தீண்டாமை குறித்த கவலை பலருக்கு இல்லை. நாளை இவர் சொல்வது போல நெய்தல் மக்கள், இந்து மதத்துக்கு மாறினாலும்,நெய்தல் மக்களையும் பட்டியல் சாதியில் சேர்த்து ஒடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே இன்னும் பல இடங்களில், சாதிய கொடுமைகளை மறைமுகமாக அனுபவிக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே நினைவில் கொள்ளட்டும்.

ஆக கடலோர மக்களின் பிரச்சினைகளில் கிறித்துவம் கள்ள மௌனம் சாதிக்கிறது என்று சொல்லும் அதே வேளையில், நீங்கள் தீர்வாக சொல்லும் மதங்களும் அதையே தான் செய்கின்றன என்பதையும் சேர்த்தே சொன்னால் உத்தமம்.

இங்கே கூடங்குளம் அணு உலை சிக்கலில், கடலோர தாது மணல் பிரச்சினையில் ஓரளவுக்கு ஆதரவு தந்த கிறித்துவ அமைப்புகள், கத்தோலிக்க கிறித்துவ மதம் போன்றவை எல்லாம், மத்திய,மாநில அரசால்,வலுவான அரசியல் பின்புலம் கொண்ட தனி நபர்களால் மிரட்டப்பட்டு பின் ஒதுங்கிக் கொண்டன என்ற உண்மை இவருக்கு தெரியாதா? 


தாது மணல் கொள்ளையை எதிர்த்ததற்காக எதிரிகளால் கை,கால்கள் முறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியார்களை இவர் பார்த்தது இல்லையா? அணு உலை போராட்டத்தில் முன் நிற்கும் அண்ணன் புஷ்பராயனை கேட்டு தெரிந்து கொள்ளலாமே!

இவற்றுக்கெல்லாம் இவர் தீர்வாக சொல்லும் ஆர்.எஸ். எஸ் இந்துத்துவ அமைப்புகள் நெய்தல் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறதா? நெய்தல் மக்களுக்கு எதிராகத் தானே நிற்கிறது!

கத்தோலிக்க கிறித்துவம் செய்யும் தவறுகளை பட்டியலிட்டு,நீங்கள் பொதுவாக ஒரு மேடையில் சொல்வீர்கள் என்றால் அதை நான் உளமார ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை விட கொடூரங்களை செய்யும் ஆர்.எஸ்.எஸ் மேடைகளில் நின்று அவர்களுக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டு பேசும் போது, உங்களையும் உங்கள் நிலைப்பாட்டையும்,
போலித் தன்மையையும் சேர்த்தே நான் கணக்கிட்டாக வேண்டும்.

இன்னொன்றையும் சொல்லி ஆக வேண்டும். ஜோ.டி.க்ரூஸ் என்ற நபர்,தன் தனிப்பட்ட அனுபவங்களை,தன் படிப்பினைகளை,தன் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். சிக்கல் இல்லை. ஆனால் பேசும் மேடைகளுக்கு ஏற்ப,தன்னை ஒரு நெய்தல் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தன்னை சித்தரித்துக் கொண்டு பேசுவதென்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல. அப்படி ஒட்டமொத்த நெய்தல் மக்களின் பிரதிநிதியாக யாரும் அவரை அங்கீகரிக்கவில்லை.

எனவே நெய்தல் மக்களின் பிரதி நிதியாக எண்ணிக் கொண்டு, இந்து மதத்தை ஏற்க வேண்டும், அது தான் கத்தோலிக்க கிறித்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்று சொல்வதை நாங்கள் ஏற்கவோ, அல்லது அதை சொல்லுவதற்கான அதிகாரமோ ஜோ.டி.க்ரூஸ் என்ற ஆனந்துக்கு கிடையாது!அவர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டிய கட்டாயம் நெய்தல் மக்களுக்கும், கிறித்துவத்தை உணர்ந்த உண்மையான கிறித்துவர்களுக்கும் கிடையாது என்பதையும் க்ரூஸ் அவர்கள் உணர்ந்தால் நலம்.

தீவிர இந்துத்வவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட பலர்(பெயர்கள் வேண்டாம் என்பதால் தவிர்க்கிறேன்) க்ரூஸ் தான் மிக சரியானவர் என்பது போல, அவரவர் தனிப் பக்கங்களில், விழாக்களில் இவரை பங்கு பெற செய்வதும், புகழ்ந்து பேசுவதும் நாம் அறியாமல் இல்லை. எதோ க்ரூஸ் தான் ஒட்டுமொத்த நெய்தல் மக்களின் பிரதிநிதி என்பது போல,இவர்களும் கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்து மதத்துக்கு வர சொல்லி ஜோ.டி.க்ரூஸ்-ஏ சொல்லிவிட்டார் என்பது போல ஓவர் பில்டப் எல்லாம் கொடுத்து பார்க்கிறார்கள்.

சரி! நெய்தல் மக்களில் பல பிரச்சினைகளை,ஜோ.டி.க்ரூஸ் அறிந்து இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர் என்றாவது ஒருநாள் கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்காக வலுவாக குரல் கொடுத்ததுண்டா? மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் எத்தனை முறை கலந்து இருக்கிறார்?

ஒரே ஒரு முறை, உண்மை கண்டறியும் குழு என்ற ஒரு குழுவில் வந்திருந்த சில தமிழ் தெரியாத நபர்களுக்கு,மொழி பெயர்ப்பாளராக மட்டுமே இடிந்தகரைக்கு வந்தாரே ஒழிய, தான் ஒரு நெய்தலின் பிள்ளை, நானும் உங்கள் போராட்டத்துக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று என்றாவது சொல்லியதுண்டா? அதற்கான முயற்சிகள், ஆய்வு கட்டுரைகள், பேட்டிகள், குறும்படங்கள் ஏதாவது எடுத்ததுண்டா?

சரி! அணு உலை, தாது மணல், அன்றாட மீனவர் படுகொலை குறித்த விடயங்களுக்காக அவர் எழுதிய கட்டுரைகள், ஆய்வுகள், போராட்டங்கள், குறும்படங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கே திரும்புங்கள் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு வந்து விடும் என்று சொல்லும் ஜோ.டி.க்ரூஸ் அவர்கள்,முதலில் நெய்தல் மக்களின் போராட்டங்களுக்காக எதையாவது செய்யட்டும், பேசட்டும் அது குறித்து எழுதட்டும், தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த பிரச்சினைகளை முதலில் ஊடகங்களில் பேசட்டும்.!

மற்றபடி அவர் சொல்லும் தாய் மதத்துக்கே திரும்புங்கள் அது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பது எதார்த்தத்தில், தற்போதைய சூழலில் சாத்தியமில்லாத ஒன்று.ஐநூறு வருடங்களுக்கு முன்புள்ள வரலாற்றுக்கு,அவர் சொல்லும் இன்றைய தீர்வு ஒருபோதும் ஏற்புடையது ஆகாது.

ஜோ.டி.க்ரூஸ் சொல்வது போல நெய்தல் மக்களின் அதிகாரங்கள் இழந்து போனது உண்மை! அதற்கான தீர்வுகள் வேண்டும் என்று நெய்தல் பிள்ளைகள் விரும்புவதும் உண்மை. ஆனால் அதற்கு அவர் சொல்லும் காரணங்களும், தீர்வுகள் ஏற்புடையது அல்ல.

கடலோர மக்கள் வாழும் மீனவ தொகுதிகளை மறு சீரமைக்க வேண்டும்.நெய்தல் மக்கள் அரசியல் அதிகாரங்களை பெரும் வகையில், நெய்தல் தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு, நெய்தல் தொகுதிகள் அமைக்கப் பட வேண்டும்.மீனவ அமைச்சர் பதவி என்பது கடலோர மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அப்படியானவருக்கு தான் மீனவர்களின் சிக்கல்கள், வாழ்வாதார பிரச்சினைகள், எல்லைகளில் பிடிபட்டு சித்தரவதைக்கு உள்ளாகும் மீனவர்களின் குடும்ப சிக்கல்கள் அனைத்தும் தெரியும். அதன் வலி புரியும்.ஆக ஏற்கனவே இருக்கும் தனித் தொகுதிகளைப் போல,மீனவர்களுக்கான தொகுதிகள் உருவாக்கப் பட வேண்டும். அது தான் தீர்வைத் தரும். அதற்காக வலுவான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

க்ரூஸ் அவர்களுக்கு கல்வி என்ற மிகபெரிய ஆயுதம் கிடைத்திருக்கா விட்டால், நல்ல பல தரமான கல்வி நிலையங்களில் கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கா விட்டால்,அவரது சாதனைகள் சாத்தியமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவேளை அப்படியான அங்கீகாரங்கள் கிடைத்திருக்கும் என்று எண்ணினாலும் கூட அதற்கான கால அளவு கட்டாயம் மாறுபட்டு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

சம வெளி சமூகங்களுக்கு சமமாக,நெய்தல் மக்கள் கல்வி என்ற ஆயுதத்தை வலுவாக எடுக்காவிட்டால்,இப்போது இருக்கும் இந்த அடையாளமும், குரலும் கூட வெகு ஜன ஊடகங்களில் பதிவாகி இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.அந்த கல்வியை தந்தது கத்தோலிக்க கிறித்துவம் என்பதை க்ரூஸ் அவர்கள் மறந்து விட கூடாது. நெய்தல் மக்களின் வலுவான ஆயுதம்,கல்வியாகத் தான் இருக்க முடியும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

அடுத்து க்ரூஸ் சொல்வதைப் போல கத்தோலிக்க பாதிரிமார்களின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து கடலோர ஊர்களும் இருக்கிறது என்ற பிம்பம் தவறு. குமரி மாவட்டத்தில், என் சொந்த கடற்கரை கிராமத்தில், அந்த ஊரை முப்பது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுப் படுத்துவது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே. கடலோர ஊர்களில் வீரத்துக்கும் தீரத்துக்கும் மிகவும் பெயர்போன, மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமம் தான் என்னுடைய கிராமம். கடலோர ஊர்களில் உள்ள அத்தனை மக்களுக்கும் இந்த உண்மை தெரியும்.

ஆனால் இன்றைக்கு ஒரு குடும்பம் தான் அந்த ஊரை சீரழிக்கிறது. அவர்கள் வைப்பது தான் சட்டம். காரணம் அரசியல் அதிகாரம் மற்றும் பதவிகள். தமிழ்நாட்டில் பலரால் அறியப்பட்ட , காவல்துறையின் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர். வழக்குரைஞர் ஒருவர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர். இது போதாதா?காவல்துறையும், சட்டமும் கையில் இருப்பதாக மிரட்டினால் எவன் எதிர்த்து பேசுவான்? ஊரை ரெண்டாக்கி வைத்திருக்கும் இது போன்ற நாட்டாமைகள் தான்,இன்றைக்கு கடலோர ஊர்களை சீரழிக்கிறார்கள் என்பதை க்ரூஸ் போன்றவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

இங்கே எவனும் இந்த குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்து விட முடியாது.அப்படி செய்ய முயற்சித்தால் காவல்துறை,பொய் வழக்கு என்று குடைச்சல்கள் வரும். இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் சொந்த சகோதரர்கள் செய்யும் அட்டூழிடங்கள் தான் தாங்க முடிவதில்லை. எத்தனையோ பாதிரியார்கள் இந்த குடும்பத்தின் அட்டூழியத்தால் ஓடியதுண்டு, அடிதடிகள் நடந்ததுண்டு. பாதிரியாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இப்படி கடற்கரை ஊர்களில் பல ஊர்களை நானறிவேன்.க்ரூஸ் சொல்வது போன்று அல்லாமல் எங்கள் ஊரில் அதிகாரம் என்பது தனி நபர்களிடம் அல்லது மண்ணின் மைந்தர்களிடம் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் யோக்கியர்களா என்றால் இல்லை.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர்களோடு மல்லுக் கட்டி கொண்டு இருக்கிறேன். இந்த ஊரை இவர்கள் கையில் இருந்து இளைஞர்கள் பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் சீரழிந்து விடும் என்று இவர்கள் செய்யும் அட்டூழியங்கள்,அனைத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறேன். ஊர் முழுக்க இந்த அட்டூழியங்களை விவாதமாக்கி இருக்கிறேன். பலருக்கு தெரியும் என் எழுத்துக்கள் அனைத்தும் உண்மை தான் என்று. ஆனாலும் அந்த கூட்டத்தை எதிர்த்து நிற்க பயம்.

என்னோடு வெகு சில நண்பர்கள்/இளைஞர்கள் உடன் நிற்கிறார்கள்.ஆனால் அவர்கள் மீதும், அவர்கள் குடும்பம் மீதும் பொய் வழக்குகள், நீதிமன்றம் என்று அலைய விட்டு இருக்கிறது இந்த நாட்டாமைக் குடும்பம்.இதை எல்லாம் பார்க்கும் போது, நம்மைப் போலவே மாற்றம் விரும்பும் இளைஞர்கள் கூட பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். காரணம் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வந்ததற்கா இந்த தேவையற்ற வழக்குகள் என்று!

எனக்கும் கூட எத்தனையோ மிரட்டல்கள்,உன்னை அடித்து விடுவோம், ஒழித்து விடுவோம் என்றும், மிரட்டல்கள். என் தாய் தகப்பனிடம் உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் எதற்கும் நாம் பயப்பட போவதில்லை.

ஆனால் பலவேறு சூழல்களால் இன்று அந்த பணிகள் முடங்கி கிடக்கின்றன. காரணம் இளைஞர்கள் பலர் பயந்து நிற்கிறார்கள். சட்டம், வழக்கு என்று வந்தால் என்ன செய்வதென்று! என்னுடைய நோக்கம், இன்றைய இளைஞர்கள் அனைவரும் ஓன்று திரள வேண்டும். ஒற்றுமையோடு எதிர்த்து நிற்க வேண்டும்.கல்வி, ஊர் நிர்வாகம், நல்ல பல திட்டங்களை ஊருக்கு செய்ய வேண்டும், கடலோர மக்களுக்கான, படிக்கும் குழந்தைகளுக்காக சிறப்பு பயிற்சிகள், கல்வியில், போட்டித் தேர்வுகள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு, நூலகம் ஓன்று அமைக்க வேண்டும்,ஆங்கில சிறப்பு பயிற்சி, பொது அறிவு குறித்த பயிற்சிகள், இணையதளம் குறித்த ஒரு விழிப்புணர்வு என்று பல பல விடயங்களை முன் வைத்து பேசி இருக்கிறோம். ஏற்கனவே கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை இரண்டு நாட்கள் நடத்தி இருக்கிறோம். இதையே ஊரின் இளைஞர்கள் அனைவரும் ஓன்று கூடி நின்றால், அதிகாரங்களை பிடுங்கி மாற்றம் கொண்டு வர இயலும் என்பது எனது நம்பிக்கை. வயதான பழைய நாட்டமைகளை எல்லாம் கடலோர ஊர்களில் முதலில் ஓய்வு பெற செய்ய வேண்டும்.

முடியாதென்று சொல்வார்கள் என்றால் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். புது ரத்தம் பாய்ச்சும் இளைஞர்கள் வர வேண்டும், அதிகாரங்களை கையில் எடுக்க வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் கூட, இனி வரும் காலங்களில் அதை நோக்கி கட்டாயம் நகர்ந்து கொண்டு இருப்பேன். நெய்தல் கிராமங்களில்,இந்த மாற்றமும், விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும். அப்படியான மாற்றம் வர வேண்டும்.

ஆக அய்யா க்ரூஸ் சொல்வது போல, இன்னும் கத்தோலிக்க மதம் தான் ஊர்களை நிர்வகிக்கிறது, கிராம மக்கள் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது என்பதெல்லாம் கற்பனை. வேண்டுமானால் அவர் என்னோடு வரட்டும் நான் என் ஊர் நிலவரத்தை நேரில் காட்டுகிறேன்.

என் பார்வையில் க்ரூஸ் அவர்களுக்கு என்ன சிக்கல் என்றால், அவரது ஆழி சூழ் உலகுக்கு கடுமையான எதிர்ப்புகள்,அவரது சொந்த ஊரில் இருந்தது என்பது உண்மை. ஆனால் அதை செய்தது பாதிரியார்களா என்றால், இல்லை. காரணம் பாதிரியார்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்றால் அனைத்து ஊர்களின் பாதிரியார்களும் க்ரூஸ் அவர்களை எதிர்க்க வேண்டும். அதற்கு சாத்தியம் இல்லை.

இங்கே எதிர்ப்பு என்பது அவரது ஊரில்,அவருக்கு எதிரானவர்கள் பாதிரியாரோடு கை கோர்த்துக் கொண்டு,அவர் இந்த ஊருக்கு வரக் கூடாது போன்ற சிலவற்றை செய்தார்கள். பாதிரியாரோடு இணைந்து நிற்பவன், இவரது சொந்த சகோதரர்கள் தான். ஆனால் இந்த மக்கள் ஓன்று சேர்ந்து,க்ரூஸ் அவர்களின் கருத்து சுதந்திர நியாயத்தின் பக்கம் நின்றிருந்தால், பாதிரியார்களால் எதுவும் செய்து விட இயலாது. என்னைப் பொறுத்த வரையில் அந்த அளவுக்கு ஒரு அதிகாரமும் பாதிரியார்களுக்கு இல்லை.

பாதிரியார்கள் தவறு செய்த போது,இது போன்ற சில்லறை அரசியல் செய்த போதெல்லாம்,அடித்து ஓட விடப்பட்டார்கள் அல்லது படுகிறார்கள்.எங்கள் ஊரே அதற்கு சாட்சி. இன்னும் எத்தனையோ ஊர்களில் இது போன்ற பல உதாரணங்கள் உண்டு.

ஆக க்ரூஸ் அவர்கள், அவரது தனி மனித கோபத்தை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த கத்தோலிக்க கிறித்துவமும் தவறு,அதற்கு மாற்று இந்துத்துவா தான் என்று திரிக்க பார்க்கிறார். அது உண்மை இல்லை.இது கிட்டத்தட்ட தனி மனித அரசியல். இந்த தனி மனித அரசியலுக்கு இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர் அவருக்கு ஒத்து ஊதுகிறார்கள் என்பதே உண்மை.அவரது சொந்த ஊரில் அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி! அவரது கருத்து சுதந்திரத்தின் மீது, விளக்கம் கேட்டு இருக்கலாம். ஆனால் அவரை ஊருக்குள் அனுமதிக்க இயலாது என்பது தவறு!

க்ரூஸ் அவர்கள் நெய்தல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், கடலோர மக்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்கட்டும்.மீனவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகளை ஊடகங்களில் பேசட்டும், எழுதட்டும். கடலோர மக்களின் கல்விக்காகவும்,சிறு சிறு உதவிகளுக்காக ஏங்கி நிற்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யட்டும்.

மாணவர்களுக்கென்று சிறப்பு பயிற்சிகள் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யட்டும். அரசியல் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பேசட்டும்.அதற்கு என்ன செய்வது என்று நெய்தல் மக்களோடு அமர்ந்து பேசட்டும். தாய் மதத்துக்கு திரும்புங்கள் என்ற தீர்வை தவிர,அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க, வேறேன்ன நியாயாமன மற்றும் எதார்த்தமான தீர்வுகள் என்பதை முன் வைக்கட்டும்.நெய்தல் மக்களின் பிரச்சினைகள்,அதற்கான தீர்வுகள் குறித்த விவாதங்களை நெய்தல் மக்களோடு நடத்தட்டும்.

ஒட்டுமொத்த மீனவர்களின் பிரதிநிதியாக இந்துத்துவ மேடைகளில் தன்னை அடையாளப் படுத்துவதை நிறுத்தி கொள்ளட்டும்.கிறித்துவத்தை முழுமையாக ஏற்காத போது,அல்லது அவற்றின் அடிப்படைகள் கூட தெரியாத போது, தன்னை ஒரு கிறித்துவன் என்று அடையாளப் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்துத்துவ மேடைகளில் தான் இந்து என்பது போலவும், வெளியே வந்தால் தான் கிறித்துவன் என்றும் ரெட்டை அடையாளம் போடுவதை நிறுத்த வேண்டும். எதை உண்மையாக ஏற்கிறார் என்பதை வெளிப்படையாய் ஒத்துக் கொண்டால் இங்கே எவருக்கும் சிக்கல் இல்லை.அவரது திருமணமே,வடபழனி முருகன் சன்னிதானத்தில் தான் நடை பெற வேண்டும் என்று அவர் தீர்மானித்து அப்படித் தான் செய்தார் என்பதும் உண்மை. அதற்கு காரணம் முருகனை அவர் வழி படுபவர் அல்லது ஏற்பவர் என்கிறார். இங்கே மதங்கள் அவரவர் தனி நபர் உரிமை. ஆனால் ரெட்டை வேடம் கேள்விக்குள்ளாக்க படும்!

சமவெளி சமூக மக்கள் எல்லாம்,நீச்சல் போன்ற பல விளையாட்டுகளில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு தயாராகும் போது, ஐந்து வயதில் கடலில் நீச்சல் அடிக்க பழகும்,நெய்தலின் ஆண்,பெண் குழந்தைகளை எல்லாம் ஏன் அப்படியான ஒரு போட்டிக்கு தயார் படுத்த முயற்சிக்க கூடாது?

காரணம் மீனுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ற அளவுக்கு,நீச்சலில் நெய்தல் பிள்ளைகள் கில்லாடிகள். அவர்களின் திறமைகளுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்க, ஏன் முயற்சிக்க கூடாது. அதற்கான பயிற்சிகளுக்கு ஆகும் செலவுகள், நல்ல சில பயிற்சியாளர்களை அடையாளம் காட்டுவதும், அதற்கான உதவிகளை செய்வதும், அரசு உதவி இருந்தால் அவற்றை பெற்றுத் தரவும் ஏன் முயற்சிக்க கூடாது.

ஒலிம்பிக் போட்டி அளவுக்கு முயற்சித்தால்,ஒருவேளை அது கிடைக்காவிட்டாலும் கூட, கட்டாயம் இந்திய அளவில், ஆசிய அளவில். பல்வேறு சாதனைகளை நெய்தல் குழந்தைகள் படைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

பல குற்றாலீஸ்வரன்களும், ஜெயவீனாக்களும் நெய்தலில் நிலத்தில் அடையாளப்படுத்த ஆள் இல்லாமல்,ஒளிந்திருக்கிறார்கள்.அவர்களின் திறமை வெளியே வராமல் மறைந்து கிடக்கிறது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். கல்வியில், அரசு பணிகளில் நெய்தல் மக்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்று சிந்திக்கலாம்.

நெய்தல் நிலத்தை முன்னேற்ற இப்படியான ஆக்கப் பூர்வமாக சிந்திப்பது தான் சரியான தீர்வாக இருக்கும், அது தான் அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க உதவும்! அதை விடுத்து இந்துவாக மாறு என்ற அவரது தீர்வு கேலிக்கூத்து!

குறிப்பு:

இந்த பதிவு நெய்தல் மக்களுக்கு மட்டுமே!எனவே தயவு செய்து வேறு யாரும் மதம் சார்ந்த கேள்விகளையோ, எதிர்கருத்துக்களையோ முன் வைக்க வேண்டாம்.

இந்த பதிவை,இதன் சாராம்சத்தை,ஜோ.டி.க்ரூஸ் அவர்களுக்கு நெருக்கமான நபர்கள் அவரிடம் கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி!

அவர் மறுப்பு தெரிவித்தால், எதிர் கேள்விகள் வைத்தால் ஆதாரங்களோடு வாதிடவும்,நிரூபிக்கவும் நான் தயார்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

2 கருத்துகள்:

  1. ஆண்டனி வளன்,

    எல்லாம் சரி, நீங்கள் சொல்லிக்காட்டியிருக்கும் கல்வி, மருத்துவ வசதி இன்னபிற வசதிகளைக் கொடுத்தது உண்மையான கருனையினாலா என்பதை உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மண்டைக்காடு கலவரத்தை உருவாக்கியது ஹிந்துக்களா? இந்த அபாண்டத்தை எழுதும் நீங்கள் யார் மீது வேண்டுமானாலும் சேற்றைவாரி இறைப்பீர்கள்.

    கன்யாகுமரியில் காலையில் சூரியனுக்கு பூஜை செய்யும் ஹிந்துக்களை செய்ய விடாமல் தடுப்பதற்காகத்தானே சர்ச்சுகளில் இருந்து அலறுகிறார்கள்?

    மக்களுக்கு பிஸ்கட் தூக்கிப்போடுவதுபோல கல்வி கொடுத்தோம், மருத்துவம் கொடுத்தோம் என்ற பெயரில் மதமாற்றத்தை நடத்திக்கொண்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதுதானே கத்தோலிக்க சர்ச்சுகள் செய்த சாதனை?

    ஜோடி குருஸுக்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள், உங்கள் தரப்பைச் சொல்லுங்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் வந்துதான் பரதவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினார்கள் எனச் சொல்லாதீர்கள். வேண்டுமானல், கிறிஸ்தவர்களாக மாறினால்தான் உனக்கு கல்வி மற்றும் மருத்துவம் என மிரட்டி மதம்மாற்றிக்கொண்டு நீங்கள் சொன்ன “சேவைகளை” கத்தோலிக்கம் வழங்கியதென்று சொல்லுங்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால், மதம் மாறியதற்கு கூலி கல்வியும், மருத்துவமும்.

    கிறிஸ்தவர்கள் மீது எனக்கு கோபமில்லை. சக மனிதனின் கடவுளை சாத்தான் எனச் சொல்லி வளர்க்கும் கிறிஸ்துவத்தின் பிள்ளைகள் இப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

    நீங்கள் தொடர்ந்து கத்தோலிக்கம்தான் இந்தியாவையே நிமிர்த்தியது என்றுகூட எழுதுங்கள்.

    படிக்க நாலுபேர் இல்லாமலா போய்விடுவான்..

    ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு