வியாழன், 16 ஜனவரி, 2014

அரசு ஊழியர்களின் குழந்தைகள்- அரசு பள்ளி


அரசு ஊழியர்களின் குழந்தைகள்,கட்டாயம் அரசு பள்ளியில் தான் படித்தாக வேண்டும்!

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும், அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று எவனாவது சொன்னால், முதலில் அரசு பள்ளிகளை எல்லாம் தரமாக மாற்றுங்கள், ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வாருங்கள், கட்டமைப்பை சரி செய்ய சொல்லுங்கள், அதை மாற்றுங்கள், இதை மாற்றுங்கள், இவற்றை எல்லாம் செய்தால் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்று பேசி நைசாக தப்பி ஓடுவார்கள்!

ஆனால் அரசு பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை, சேர்க்கா விட்டால் உங்கள் அரசு வேலைக்கே வெட்டு என்று சட்டம் போட்டால்,
அம்புட்டு பயலும் அடுத்த கணமே அரசு பள்ளிக்கு தன் பிள்ளைகளை கொண்டு போய் சேர்க்காமல் ஓய மாட்டான்!

சரி அப்படியானால் அரசு வேலை செய்பவர்கள் எல்லாம் பாவப் பட்ட ஜெனமங்களா? அவர்களுக்கு இது தான் தண்டனையா?தரமில்லாத பள்ளிகளில் தான் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம்!

ஆனால் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் அல்லது மயிலே மயிலே இறகு போடு என்றால் ஒரு போதும் போடாது போன்ற உதாரணங்களை அவ்வப்போது கையில் எடுத்தாக வேண்டி இருக்கிறது!சூழல் அப்படி!சிலவற்றை அதிரடியாய் தான் செய்ய வேண்டும்!

சரி இப்போது அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால்,அரசு பள்ளிகளின் தரம் உயருமா உயராதா என்றால் கட்டாயம் உயரும். எப்படி?அரசு பள்ளிகளின் தரமும், அதன் கட்டமைப்பும்(அனைத்து அரசு பள்ளிகளையும் அல்ல) இப்படி சீர்கெட்டுப் போய் இருக்க என்ன காரணம்?

அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய மேல் மட்ட ஊழியர்கள்,கல்வித்துறை அதிகாரிகள், நன்றாக போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள் தானே!

உதாரணமாக அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி சரி இல்லை என்றால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் யாரை தொடர்பு கொண்டு மனு கொடுப்பார்?

அவரது மேலதிகாரியிடம் கொடுப்பார், இப்படியாக பல்வேறு உயர் மட்டம் வரை இந்த கோரிக்கை செல்லும், இறுதியாக அதற்கு அனுமதி கொடுக்கும் அலுவலரும் அரசு ஊழியராகத் தான் இருப்பார்.அவரது குழந்தைகளும் அரசு பள்ளியில் படிக்கும் போது,கட்டாயம் அரசு பள்ளிகள் கேட்கும் அனைத்து வசதிகளுக்கும் அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும்.அதைப் போலவே அரசு ஆசிரியர்களின் தரம், மதிப்பீடு எல்லாம் கட்டாயம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.(காரணம் ஆசிரியரின் குழந்தைகளே அரசு பள்ளியில் படிக்கும் போது,ஆசிரியர்களும் நன்றாக பாடம் எடுத்தாக வேண்டிய கட்டாயம்)..இப்படி அனைத்து தரப்பும் மாறும்!.

தரத்தை உயர்த்துங்கள், பிறகு எங்கள் குழந்தைகளை சேர்ப்போம் என்று விதண்டாவாதம் செய்வது ஒரு ரகம்!(இந்த மாற்றம் எப்ப நடக்கும்னு நீங்களே ஊகித்து கொள்ளலாம்:))

உங்கள் குழந்தைகளை, நீங்கள் அரசு பள்ளியில் சேர்த்தால் தானாவே அதன் தரம் உயரும் என்பது இன்னொரு ரகம்!

தங்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தால், அத்தனை அரசு ஊழியர்களும்,அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் வந்து சேரும்.காரணம் சுய நலத்தில்(தங்கள் குழந்தைகளின் நலன்) ஒரு பொது நலம்!

அடிச்சான்யா ஆப்பு அரவிந்த கேஜ்ரிவால்!

மொதல் ஆப்பே சரியான ஆப்பா இருக்கே:)

நம்ம ஊருக்கும் இப்படி யாராவது வந்து சேர்ந்தால் நல்லா இருக்கும்:)

குறிப்பு:

அரசு பள்ளிகள் அனைத்தும், தரமற்றவை என்றோ அல்லது தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமானவை என்றோ சொல்வதற்கான பதிவு அல்ல.மாறாக இந்த மாற்றங்கள் அனைத்தும் வந்தால், அரசு பள்ளிகளின் தரம் இன்னும் உயரும் என்பதே நான் சொல்ல வரும் செய்தி!நானும் ஒரு அரசு பள்ளி மாணவனாக இருந்து வந்தவனே!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக