வியாழன், 16 ஜனவரி, 2014

ஈழ விடுதலை திரைப்படமும்,தமிழ் இயக்குனர்களும் !


ஈழ விடுதலைக்காக உணர்வோடு நிற்கும் தமிழ் இயக்குனர்கள் சேர்ந்து,ஈழம் குறித்த ஒரு வலுவான சினிமாவை உண்மையாய் பதிவு செய்யலாமே!

ராவண தேசம் படம் நன்றாக இருக்கிறதென்றும், சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், புலிகளின் பேராண்மை குறித்தும் பேசும் அதே வேளையில், பிரபாகரன் குறித்தும், இந்தியா செய்த உதவியை அவர்கள் மறுத்தார்கள் என்றும்,ஒரு சில விமர்சனங்களையும் சேர்த்தே இந்த படம் வைத்திருக்கிறது என்றும்,விமர்சகர்கள் பலர் சொல்கிறார்கள்.

படத்தை இயக்கிய அஜய் நுத்தகி தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நபர்.ஈழ விடயத்தை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள்.எல்லோருடைய பார்வைகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.ஈழத்தின் முழு அவலத்தையும், நியாயத்தோடும் உண்மையோடும் சொல்ல வேண்டும் என்று எண்ணும் அதே வேளையில், சினிமா என்ற வணிகத்தையும் சேர்த்தே நாம் கணக்கிட்டாக வேண்டி இருக்கிறது.நிறை குறைகள் இரண்டும் இல்லாமல் சினிமா இல்லை.

ஒரு பெரும் வணிக ஊடக சூழலில் இருந்து கொண்டு, வேறொரு மொழியை தன் தாய் மொழியாகக் கொண்ட அஜய் என்ற இயக்குனருக்கு,ஈழ மக்களின் அவலம் குறித்த ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்காக முதல் பாராட்டு!

ஒட்டுமொத்த சிங்களவனுக்கு ஆதரவாக,ராஜபக்சே கும்பலின் பேராதரவோடு மெட்ராஸ் கபே போன்ற சினிமாக்களை எடுத்து,ஒட்டு மொத்த இந்திய மக்களின் மனதிலும் விடுதலைப் புலிகளைத் தவறானவர்களாகவே காட்ட வேண்டும் என்று முழு வீச்சில் செயல் பட்ட ஜான் ஆபிரகாம் போன்ற அயோக்கியர்களுக்கு மத்தியில்,ஈழ மக்களின் நியாயத்தை பேசியதற்காக அஜய்க்கு இரண்டாவது பாராட்டு!

இந்தியாவில் வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பல இயக்குனர்கள் ஈழத்தின் அவலத்தையும், புலிகளைக் குறித்தும் சினிமா எடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கும். ஒரே விடயத்தை அவரவர் புரிதலுக்கேற்ப சொல்லும் போது, சில நேரங்களில் உண்மைகள் மறைந்து போகலாம்.அது திட்டமிட்டோ அல்லது புரிதலில் ஏற்பட்ட தவறுதலாகவோ கூட இருக்கலாம்.

இங்கே நம் தமிழ்நாட்டில் நல்ல திறமையான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஈழ போராட்டத்தையும், அங்கு நடந்த அவலத்தையும், விடுதலைப் புலிகள் மற்றும் வெகு ஜன போராட்டங்கள் பற்றியும் நன்கு புரிந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்ட பலர் இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஈழம் பற்றிய ஒரு முழுமையான,அதே நேரத்தில் உண்மைகளை வலுவாகச் சொல்லும் ஒரு திரைப்படத்தை எடுக்க கூடாது

தனித்தனியாகப் பார்த்தால் உணர்வுள்ள பல இயக்குனர்கள் வெற்றி இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்படி ஒரு படம் எடுத்தால் கட்டாயம் பலர் அந்த படத்தை பார்க்கவும், மேடை போட்டு முழுங்கும் பலரது பேச்சை கேட்க விரும்பாதவர்கள் கூட திரைப்படம் என்றால் பார்த்தும் தெரிந்து கொள்வார்ககள்.இதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். நம்மாலான அணைத்து முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டி இருக்கிறது!

அடுத்த கேள்வி எங்கு வரும் என்றால், இந்த படத்தை யார் தயாரிப்பது?பலர் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஊதியம் எல்லாம் அதிகம் ஆகும்,செலவு நிறைய வரும் என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தனிப்பட்ட விதமாக யாரும் தயாரித்து நஷ்டப்பட்டு போக வேண்டாம்.முள்ளி வாய்க்கால் முற்றம் கட்டுவதற்கு மக்களிடம் தான் பணம் வாங்கி கட்டி இருக்க வேண்டும்,தனிப்பட்ட நபர்களின் பணத்தால் அந்த வரலாற்று சின்னம் கட்டப்பட்டு இருக்க கூடாது என்று வருத்தப்பட்ட உணர்வுள்ள பல இளைஞர்கள், சிறு சிறு அமைப்புகள் மற்றும் வெகு ஜன மக்கள் இருக்கிறார்கள். எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. ஆனால் அப்படி ஒரு வலுவான படத்தை நம் தரப்பில் எடுக்க வேண்டும்.

அப்படி ஒரு பிரமாண்டமான படம் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று, இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து சொன்னால், தொகை முழுவதும் சேர்ந்த பிறகே கூட நீங்கள் படத்தை ஆரம்பிக்கலாம்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த தொகையை பிரித்து தர தயாராக இருக்கிறோம்.தற்போதைய சூழலில் இப்படியான ஆவணங்கள் கட்டாயம் நமக்கு தேவை.

அப்படி ஒரு வலுவான படத்தை வெளியிடுவதில் வரும் அரசு தரப்பு சிக்கல்கள் குறித்து இயக்குனர்கள் உங்களுக்கு வேறு எவரும் சொல்ல வேண்டியதில்லை.படத்தை வெளிக் கொண்டுவருவதற்காக, செய்யப்படும் சிறு சிறு சமரசங்கள் ஏற்கும்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி!

ஈழத்தை பற்றி அவன் அப்படிப் படம் எடுத்துவிட்டான், இவன் தப்பாக படம் எடுத்து விட்டான் என்று நாம் பலருக்கு எதிராக விமர்சிப்பதற்கும்,போராடிக் கொண்டே இருப்பதற்கும் பதிலாக(அது ஒரு பக்கம் வேண்டும்)வலுவான ஒரு நியாயமான,உண்மையான படத்தை ஈழ விடுதலையில் ஒன்று பட்டு நிற்கும் உணர்வுள்ள இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்தால் மகிழ்ச்சி!

ஏற்கனவே உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி போன்ற திரைப்படங்களை எடுத்த அய்யா புகழேந்தி தங்கராசுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்பதல்ல.
வெளிப்படையாய் பலருக்கும் தெரிந்த,ஒரு சில உதாரணங்கள் மட்டுமே!

** சீமான் அப்படியாக்கும், அமீர் இப்படியாக்கும், ராம் கதை தெரியாதா போன்ற விமர்சனங்கள் இங்கு வேண்டாம்**

சிந்தியுங்கள்!

-
ஆன்டனி வளன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக