வெள்ளி, 17 ஜனவரி, 2014

மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்க ஓநாய் கவலை!


மனித உரிமை மீறல் என்னும் ஆடு நனைவதாக, அமெரிக்க ஓநாய் கவலையுறுகிறது!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து, சிரியாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு புதிய ஆட்சி அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

ஆனால் மக்கள் போராட்டத்தை புறக்கணித்து விட்டு,போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதமாக, பல்வேறு மக்கள் விரோத போக்குகளில் பஷார் அல் ஆசாத்தின் அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்,தமாஸ்கஸ் நகரின் சில பகுதிகளில் ரசாயன குண்டுகளை ராணுவம் வீசியது. அரசின் இந்த ரசாயன குண்டு தாக்குதலில் ஆயிரத்து ஐநூறு வெகுஜன மக்கள் இறந்து போனார்கள்.

உலகில் மனித உரிமை எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கே அவர்களின் காவல் அரணாய் அமெரிக்கா நிற்கும். மனித உரிமை மீறலை உலகின் எந்த மூலையிலும்,எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.ரசாயன குண்டால் தன் சொந்த நாட்டு மக்களை அழிக்கும் வன் செயலை அமெரிக்காவால் தாங்கி கொள்ள முடியாது என்று மனித உரிமை மீறல் குறித்து அதீத அக்கறையுடன் அமெரிக்கா பேசுகிறது. வரிந்து கட்டிக் கொண்டு போருக்கு தயாராகி விட்டது அமேரிக்கா!அது ஏன், குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடக்கும் மனித உரிமை என்றால் மட்டும் அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள இயலுவதில்லை?

அது ஈராக் என்றாலும் லிபியா என்றாலும், சிரியா என்றாலும்?..மனித உரிமை மீது அத்தனை அக்கறையும்,கரிசனையுமா இந்த உலகத்தின் போலீஸ்காரனுக்கு?

சிரியாவில் ஆயிரத்து ஐநூறு உயிர்கள் ஒரே நாளில் ரசாயன குண்டுக்கு பலியானவுடன் வரும் இந்த கோபம்,ஏன் என் இனம் முழுவதும் ஈழத்தில் அழிந்த போது,ரசாயன குண்டுகளாலும், போரில் பயன்படுத்தக்கூடாது என்று உலகம் தடை விதித்த பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்களவன் கொன்று குவித்த போது ஏன் இந்த உலக போலீஸ்காரனுக்கு வரவில்லை?சிரியா போருக்கு ஆதரவு தரும் உலகின் கேடுகெட்ட நாடுகளுக்கு வரவில்லை?

அதெப்படி அதீத பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் உள்ள நாட்டின் மக்கள் மீதான மனித உரிமை மீறல் என்றால் மட்டும் தான் இந்த உலக போலீஸ்காரனுக்கு கோபம் பொங்கி வருகிறது?

ஈழத்தில் சிங்களவன் கொன்றொழித்தது தன் சொந்த நாட்டு மக்களை இல்லையா? பாவம் என்ன செய்வது?வளைகுடா நாடுகளை போல ஈழத்தில் எண்ணெய் கிணறுகள் இல்லாமல் போய் விட்டதே!

மனித உரிமை என்னும் ஆடு நனைவதாக அமெரிக்க ஓநாய் கவலையுற்றாலும் கூட, ஓநாயின் நோக்கம் என்னவென்பது உலகம் அறியாததா என்ன?

ஈழத்துக்கு குரல் கொடுக்காத எவனுக்கும், எந்த நாட்டுக்கும் மனித உரிமை மீறல் குறித்து பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது!

மனித உரிமை மீறலுக்கு அமேரிக்கா குரல் கொடுக்க கூடாதா என்றால், ஈராக்கிலும், லிபியாவிலும், ஆப்கானிலும் அமெரிக்கர்கள் செய்யும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் யார் கேள்வி கேட்பது?முதலில் அமேரிக்கா அதற்கு பதில் சொல்லட்டுமே!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக