வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஈழத் தமிழர் பிரச்சினை- அரசியல் தலைவர்களின் போதைக்கு ஊறுகாய் !


அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் பலரின் போதைக்கு ஊறுகாய் ஈழத் தமிழர் பிரச்சினை!

வைகோ அவர்களின்,இன்றைய (01.01.2014) பத்திரிக்கையாளர் சந்திப்பின் அடிப்படையிலான பதிவு!

அட அந்த கருமாந்திரம் புடிச்ச கூட்டணி வைக்க, எதுக்கப்பா தனித் தமிழ் ஈழம், ஈழத் தமிழர் நலன் என்ற பூச்சாண்டிகளும்,ஏமாற்று வேலைகளும்?ஈழத் தமிழர் நலனுக்கு பாடுபட்ட தலைவர்கள் யாரென்றாலும், எனக்கு ஒட்டு போடுங்கள், நான் ஈழத்துக்காக இவற்றை எல்லாம் செய்து இருக்கிறேன் என்று சொன்னால் ஏற்கலாம்.

ஆனால் பாரதிய ஜனதா கூட்டணி, மோடி அலை, மோடி வந்தால் தனி ஈழம் என்று இல்லாத பொய்களும், ஏமாற்று வேலைகளும் அருவருப்பாக இருக்கிறது!இங்கே இருக்குறவன் எவனும் மடையன் அல்ல. ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் தேசிய கட்சிகளின் கோவணங்கள் அவிழ்ந்து அம்மணமாய் நிற்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்களின் நிர்வாணத்தை மறைக்கிறேன் என்று நீங்கள் முயல்வீர்கள் என்றால், நீங்களும் அம்மணப் பட்டு நிற்க வேண்டிய காலம் கட்டாயம் வரும்!

காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் நேரு மாமா, இந்திராகாந்தி கதைகளை சொல்லி ஊரை ஏமாற்றுவார்கள்.இந்திராகாந்தி ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்தார், தனித் தமிழ் ஈழத்தை வாங்கித் தருவதாக நாடாளுமன்றத்தில் பேசினார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.அதெல்லாம் முப்பது வருடத்துக்கு முன்னாடி உள்ள கதை. இந்திராவுக்கு பிறகு ராஜீவ்காந்தி வந்தார். ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அவர் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அந்த கதையை எல்லாம் மறந்து விட்டு அல்லது திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்திரா நல்லவர் என்று ஊர் முழுக்க பேசுவோம். மேடைகள் போடுவோம்.

ஆனால் அப்போதெல்லாம் ராஜீவ் செய்த அட்டூழியங்கள் ஞாபகத்துக்கு வராது! நம்ம காங்கிரசோடு கூட்டணி வைத்தது எப்போதென்றால் 2004 நாடாளுமன்ற தேர்தலில்.கேட்டால் காங்கிரஸ் தான் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்தது அதனால் தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்பார்கள். இந்திராவுக்காக, நேருவுக்காக என்று இவர்கள் சொல்வதை நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது. அப்படியே ஏற்க வேண்டும் என்பார்கள்.

அடுத்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால், வாஜ்பாய் நல்லவர், யஸ்வந்த் சின்ஹா நல்லவரு, அத்வானி தங்கமானவரு, ஈழத்தை அவர்கள் தான் வாங்கித் தருவார்கள், அவர்கள் காலத்தில் தான் இலங்கைக்கு ஆயுதங்களே விற்கப் படவில்லை என்று வடி கட்டிய பொய்களை அவிழ்த்து விட வேண்டிய வேலை.ஆனால் வாஜ்பாய் காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டது, போரில் விடுதலைப் புலிகள் முன்னோக்கி சென்ற போது,அதை தடுக்கவும், தனி ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வாஜ்பாய் சொல்லி மிரட்டியதும்,சிலரால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விடும். காரணம் இவர்களுக்கு அரசியல் தேவை. தற்போது கூடவே மோடி அலை, மோடி வல்லவர் என்று இவர்கள் சொல்வதும் அரங்கேறும்.

பாரதிய ஜனாதாவில் இருந்து ஏன் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் வெளியே வந்து காங்கிரசை ஆதரித்தீர்கள் என்று கேட்டால் ஒன்று மதவாதம்,பாபர் மசூதி இடிப்பு,பொடா கொடுமை என்பீர்கள். அல்லது பாரதிய ஜனதா ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்று எண்ணினோம்,ஆனால் ஏமாற்றி விட்டார்கள். வாஜ்பாய் போலமற்ற தலைவர்களை நம்ப முடியாது என்று,எதையாவது காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும்.இப்படியே மாறி மாறி கூட்டணி வைக்க,இத்தனை ஆண்டுகளும் இவர்களால் சொல்லப்படும் முக்கிய காரணம் ஈழத் தமிழர் நலன்.

ஆனால் மிஸ்டர் வைகோ இந்த பொய்களும், பித்தலாட்டமும்,காலத்துக்கு ஏற்ப மாறி மாறி பேசும் பச்சோந்தி தனமும், இனியும் செல்லு படியாகாது! நீங்க வேற ஏதாவது காரணத்தை முயற்சி செய்யலாம்!

என் முதுமையின் காரணாக (அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது வைகோவின் வயது எழுபத்து ஆறு) என்னை நம்பி வந்த என் சகாக்களுக்கு இப்போதே நான் எதாவது செய்தாக வேண்டும்.அதனால் நான் எந்த கூட்டணி வைத்தாவது அவர்களுக்கு சில பதவிகளை பெற்றுத் தர வேண்டும். அது தான் என்னை நம்பி வந்தவர்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாக இருக்க முடியும் என்று இது போன்ற காரணங்களை நீங்கள் வெளிப்படையாக சொன்னால் சரி ஐயோ பாவம், பொழச்சு போகட்டும் என்று ஏற்கலாம்.

ஆனால் குஜராத்தில் ஒரு கூட்ட மக்களை அழித்த இனப் படுகொலையாளன் மோடியை நீங்கள் முன்னிறுத்தி பேசுவதும், அவனை வாழ்த்துவதும், அப்படியே இந்த பக்கம் வந்தால் ராஜபக்ஷே ஒருஇனப்படுகொலையாளன் என்றும்,இசைப் பிரியாவுக்காக அழுவதையும் பார்த்தால் நெஜமாவே உங்கள் உணர்வுகள் உண்மைதானா அல்லது போலியா என்று 
சந்தேகிக்க வேண்டி இருக்கிறது! மோடியின் குஜராத் இனப்படுகொலைக்கு பிறகு நீங்கள் நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்காக,மோடிக்காக வக்கலாத்து வாங்கிய உங்கள் பேச்சுக்களும் எல்லோரும் அறிந்த ஒன்றே! காரணம் அன்று நீங்கள் பாரதிய ஜனதா கூட்டணயில் இருந்தீர்கள் என்ற ஒரே ஒரு காரணம்!

மனிதம் கொன்றவன் எவன் என்றாலும் அவன் ஒரே தராசில் வைத்து தான் அளக்கப் பட வேண்டும்.குஜராத்தில் மக்களை கொன்றவனை மகான் என்றும், மனிதருள் மாணிக்கம் என்று பேசுவதும்,இலங்கையில் ராஜபக்சேவை இனப்படுகொலையாளன் என்று பேசுவதும் அரசியல் சந்தர்ப்பவாதம்!ராஜபக்சேவுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுத்து,பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்துக்கு சவுகான் அழைத்து வந்ததை கூட உங்களால் தடை செய்ய இயலவில்லை.

கேட்டால் பாரதிய ஜனதாவில் உள்ள அனைத்து தலைவர்களும் என் நெருங்கிய நண்பர் என்பீர்கள். ஆனால் அந்த கொடியவனின் பயணத்தை ரத்து செய்ய நீங்கள் போராட்டம் நடத்தி, சாஞ்சி பரணி பாடுவதும் என்ன நிலைப்பாடு/ஏமாற்று வேலை ? பத்தொன்பது மாத பொடா சிறைவாசம் முடிந்த காலத்தில் பாரதிய ஜனதா குறித்து நீங்கள் பேசிய பேச்சுக்கள் இன்னும் மறக்கவில்லை. அதைப் போலவே மாநிலத்திலும் தி.மு.க மற்றும் அண்ணா திமுகவோடு உங்கள் கூட்டணி நிலைப்பாடும்!

பாரதிய ஜனதா தமிழர்களுக்கு கொடுமை இழைத்து விட்டது என்று கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள் என்று எண்ணிப் பார்த்தால் ஓராயிரம் முறைக்கு மேலே வருகிறது.

ஆக ஈழத் தமிழர் நலனுக்காக தான்,மோடி அலையில் நான் சிக்கினேன் என்று நீங்கள் திரும்ப திரும்ப சந்தர்ப்பவாத அரசியலை,நியாயம் என்று சொல்வீர்கள் என்றால்,ஈழ அரசியல் வியாபாரிகள் வரிசையில் நீங்கள் வருவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்!

இது பழைய தி.மு.க காலம் அல்ல. அதே பழைய அரசியலில் வென்று விடலாம், மக்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணுவதற்கு!

அறிவார்ந்த மக்கள், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். பொய்கள் எடுபடாத காலம் இது!

கடந்த சில மாதங்களாக ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட போலி மோ(ச)டி அலை, கடந்த சில வாரங்களாக கேஜ்ரிவால் என்ற சுனாமியால் எங்கே போனது என்று கூட தெரியாமல் போய் விட்டது!

எனவே சிந்தித்து பேசுங்கள் மிஸ்டர் வைகோ!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக