வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாநிலத்தின் முதல் மதிப்பெண் பட்டியல்-தமிழ் மொழிப் பாடம்!



தமிழை முதல்பாடமாய் படித்த பிள்ளைகள் மட்டும் தான், மாநிலத்தின் முதல் மதிப்பெண் பட்டியலில் இடம்பெற வேண்டுமா? 

இப்படியான பல கேள்விகள் பன்னிரெண்டாம், மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியாகும் போது கூடவே சேர்ந்து வரும். சில பத்திரிக்கைகள் சிண்டு முடியும் வேலையையும், எதோ அவர்களுக்கு அதில் அதீத கவலை என்பது போலவும் எழுதுவார்கள். 

இன்றும் அதைப் போலவே பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களாய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ஆனால் மொழிப்பாடத்தில்,தமிழை தேர்வு செய்யாமல் வேற்று மொழியை தேர்வு செய்த மாணவர்கள் அதை விட கூடுதலாக ஒரு மதிப்பெண் 499 எடுத்து இருக்கிறார்களாம்.

இருந்துவிட்டு போகட்டுமே!

தமிழ்நாட்டில் தமிழை மொழிப்பாடமாய் படித்தவனுக்கு தான் முதலுரிமை. இதில் என்ன மாற்று கருத்தும், சிண்டு முடிய வேண்டிய வேலையும் பத்திரிக்கைகளுக்கு இருக்கிறது?

மாநிலத்தின் முதலிடம் வேண்டும் என்றால் தமிழ் படித்தால் தான் முடியும் என்று, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியாதா? பிறகெதற்கு பள்ளியில் வேறு மொழியை படிக்க வைக்கிறார்கள்? வேறு மொழிகளை,பள்ளியில் அல்லாமல் தனியாக படிக்க வைக்கலாமே!

பெற்றோர்களே கவலைப்படாவிட்டாலும் கூட, ஊடகங்கள் இந்த சொரிந்து விடும் வேலையை நன்றாகவே செய்கிறது. எதற்கு இந்த பிழைப்பு?

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.பத்தாம்,பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வுக்கும், வேற்று மொழி தேர்வுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தமிழில் தேர்வு எழுதி,அதிக மதிப்பெண் பெறுவதைக் காட்டிலும் பிரெஞ்சு,சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து அதிக மதிப்பெண் பெறுவது எளிது.

இதை பிரெஞ்சு மொழியை தேர்வு செய்து,பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவனே நேரடியாக சொல்லக்கேட்டு இருக்கிறேன்.

பத்து ஆண்டுகள், பன்னிரண்டு ஆண்டுகள், தமிழ்மொழியை தொடர்ந்து படித்து,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருக்கும் கடினமான பாடத்திட்டம் போல,மற்ற மொழிகளை படிப்பவர்களின் பாடத்திட்டம் கடினமாக இருப்பதில்லை.வேற்று மொழி என்பதால்,அதுவும் மேல்நிலை கல்வியில் மட்டுமே இந்த பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதால்,அந்தந்த மொழியின் 
அடிப்படை கூறுகள் தான் அவர்களுக்கு பாடத் திட்டமாய் வைக்கப்படுகிறது. மட்டுமல்லாது தேர்வும் கூட சற்று எளிதாக இருக்கும் வகையிலும்,மதிப்பெண் பெறுவதில் சில சலுகைகளும் கூட காட்டப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 

எனவே தமிழை மொழிப் பாடமாய் படிக்கும் மாணவர்களோடு, இவர்களை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. கற்கும் ஐந்து பாடங்களும் மாநிலத்தில் அனைவருக்கும்,சமமாக இல்லாத போது, ஒப்பீடு மட்டும் எப்படி சாத்தியமாகும்?

மாநிலத்தின் முதலிடம் தர வேண்டும் என்று புலம்புபவர்கள், தமிழ் மொழியை பாடமாய் எடுத்து,சாதித்து தங்களை நிரூபித்துக்கொள்ளட்டும்.

தமிழ்நாட்டில், தமிழுக்கு தான் முதலிடம் இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக