புதன், 15 ஜனவரி, 2014

அரசியலுக்கு வாருங்கள் சு.ப.உதயகுமாரன்!


தேர்தல் அரசியல் தனக்கு வேண்டாம் என்ற அண்ணன் சு.ப.உதயகுமார் அவர்களின் கட்டுரைக்கு எழுதப்பட்ட பதிலுரை!

சரியாக ஓராண்டுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை! 

இன்றைய அரசியல் சூழலில் சற்று பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

கட்டுரை என்று சொல்வதை விட அரசியல் குறித்த அண்ணன் உதயகுமார் அவர்களின் அரசியல் சார்ந்த பதிவு ஒன்றில் நான் எழுதிய பல பின்னூட்டங்களும், பின்னூட்டங்களில் உள்ள என் கேள்விகளுக்கு அண்ணன் பதிலளிக்க, மீண்டும் அதை சார்ந்த மறு கேள்விகளை நான் வைக்க,அவர்கள் பதில் சொல்லவுமாக ஒரு நீண்ட நெடிய ஆரோக்கியமான விவாதமாகவே அன்று கழிந்தது!அப்படியான பின்னூட்டங்களில் தொகுப்பே இந்த கட்டுரை!

இரவு பதினோரு மணிக்கு ஆரம்பித்த விவாதம், கிட்டத் தட்ட ஒரு மணி வரைக்கும் சென்றதாக ஞாபகம்!

தனக்கு தேர்தல் அரசியலில் உடன்பாடு இல்லை என்பதை பல முறை தெளிவாக சொல்லி விட்டார்கள். அணு உலை எதிர்ப்பே முதன்மை என்றும் சொல்கிறார்கள். ஒட்டு மொத்த சமூக மாற்றம் குறித்தே தனது கரிசனை என்றும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பு இந்த கட்டுரை எழுதிய போது இருந்த புரிதலுக்கும், மன நிலைக்கும், தற்போதைய அனுபவத்துக்கும், புரிதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. அன்று எனக்கு புரியாத பல விடயங்கள் இன்று புரிகிறது. எனவே தேர்தல் அரசியலுக்கு பதிலாக ஒட்டு மொத்த சமூக மாற்றமே தனது லட்சியம், தேர்தல் அரசியல் அல்ல என்று அவர்கள் சொன்னதை இன்று என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது! ஒருவேளை அன்றைய என் எண்ணம் தவறு தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது!

குடும்ப நலன் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்களை நன்கு புரிந்து கொண்டு, நிர்பந்தங்களுக்கு அப்பாற்பட்டு,கள ஆய்வின் அடிப்படையில்,அரசியல் குறித்து அண்ணன் எடுக்கும் முடிவில் கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லை ஆயினும் கூட,மாற்றத்துக்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்ற உண்மையை,நேற்று நமக்கு சொல்லிய டெல்லி தேர்தல் முடிவுகளை,மக்கள் மகிழ்வோடு கொண்டாடும் தருணத்தில்,அண்ணனின் முடிவுகள் எதுவாக இருப்பினும் இந்த கட்டுரையை மீள் பதிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

நன்றி!

இதோ அந்த கட்டுரை!

அன்புடன் அண்ணனுக்கு!

அரசியல் குறித்தும் ,அரசியல்வாதிகள் குறித்தும் நீங்கள் முன் வைக்கும் அனைத்து வாதங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த காரணங்களுக்காக தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்ற உங்கள் கருத்தை என்னால் ஏற்க இயலவில்லை. உங்களின் இந்த கருத்தில் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

தேர்தல் அரசியலை, சாக்கடை அரசியல் என்று நாம் ஒதுக்கி விட முயல்கிறோம். அரசியல்வாதிகள் என்ன வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களா? இங்குள்ள சமூகத்தை பிரதிபலிக்கும் முகங்கள் தானே அவர்கள். இவர்களை பார்த்து நாம் பயப்படுகிறோம். ஒதுங்கி ஓட காரணங்கள் தேடுகிறோம். ஆனால் தேர்தல் அரசியலை விட சமூக அரசியலும், போராட்ட அரசியலும் கடினமானது அல்லவா!அந்த கடினமான பாதையையே நாம் தேர்ந்தெடுக்க துணிந்து விட்ட பிறகு,ஏன் இந்த தேர்தல் அரசியல் மட்டும் நமக்கு வேண்டாம்?

காமரஜரை தோற்கடித்த மக்கள் தானே இவர்கள் என்று இன்னும் எத்தனை காலத்துக்கு நம்பிக்கை இழந்து பேசி கொண்டே இருக்க போகிறோம்? அப்படி பார்த்தாலும் கூட அது காமராஜரின் தோல்வி அல்ல. அது மக்கள் தோல்வி என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காமராஜரின் ஒற்றை தோல்வியை நாம் சரித்திரமாக பேசும் அதே நேரத்தில்,அவரின் சரித்திர,சாதனைகளை எல்லாம் எளிதாக மறந்து விடுகிறோமா என்ன? இன்று வரை பேசிக் கொண்டே தானே இருக்கிறோம். அவரைப் போன்ற முதல்வர் தமிழ்நாட்டுக்கு வாய்க்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தானே செய்கிறோம். மீண்டும் அவரைப் போன்ற ஒருவர் கிடைக்க மாட்டாரா என்றும் ஏங்கத் தானே செய்கிறோம்.எத்தனை எத்தனை கல்வி கூடங்களை, உயர் தர கல்லூரிகளை ,தொழிற்சாலைகளை அமைத்து தந்தார். இந்த சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அவருடைய பங்களிப்பை எவரும் மறுக்க இயலுமா? ஏழை எளிய மக்களை பள்ளிக்கு அழைத்து வந்தவர் அய்யா காமராசர். அவர் செய்யாத சாதனைகள் உண்டா? எளிமைக்கு வேறு இலக்கணம் வேண்டுமா? தேர்தல் அரசியலில் இல்லாமலா அவருக்கு இவை அனைத்தும் சாத்தியப்பட்டது?

நீங்கள் சமூக மாற்றம் வேண்டும் என்கிறீர்கள். ஆனால் நாங்களோ சமூக மாற்றத்தோடு கூடிய அதிகார அரசியலையும் நீங்கள் கையிலெடுங்கள் என்கிறோம்.அவ்வளவு தான் வித்தியாசம்.

நீங்கள் முன் வைக்கும் வாதங்களை படிக்கும் போது இந்த ஜனநாயகத்தின் மீது துளியளவு கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது.

சமூக, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்து இன்னமும் கூட வாக்குசாவடிக்கு செல்லும் என் போன்றவர்களுக்கும், இனி வரும் காலங்களிலாவது ஒழுங்காக வாக்கு செலுத்த வேண்டும்,அந்த வாக்குகள் ஒருவேளை நாளைய சமூக,அரசியல் மாற்றத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவிடாதா என்று காத்திருப்பவனுக்கும் உங்களின் நம்பிக்கையற்ற அரசியல் பேச்சு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் கூட கொலை,கொள்ளை,கற்பழிப்பு, சுயநலம், என்று இன்றிருக்கும் பெரும்பான்மை அரசியல்வாதிகளின் வட்டத்துக்குள் ஒருபோதும் சிக்கி கொள்ளும் ஆள் இல்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் தான் நாங்கள் உங்களை அரசியலுக்கு அழைக்கிறோம். உங்கள் வாழ்நாளில் பார்த்த நல்ல அரசியல்வாதிகளே இல்லையா? அவர்களோடு உங்களை நீங்கள் ஒப்பிட்டு கொள்ள கூடாதா? ஏன் பொறுக்கி அரசியல்வாதிகளோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும்?

எவரை பார்த்தாலும் அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிடும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல நாங்கள். நல்லவர்களின் சேவை இந்த மக்களுக்கு கிடைக்காமல் போய் விட கூடாதே என்ற ஆதங்கத்திலும், நல்ல ஆட்சியாளர்களே இந்த சமூகத்தில் இல்லையா என்று நொந்து குறைபட்டு கொண்டிருக்கும் கோடான கோடி மக்களுக்கு இல்லை இல்லை, இதோ இருக்கிறார் எங்கள் உதயகுமார் என்று அடையாளம் காட்ட வேண்டும் என்ற ஆர்வ மிகுதியாலுமே உங்களை நாங்கள் தேர்தல் அரசியலுக்கு அழைக்கிறோம். வேறெந்த காரணங்களும் இல்லை.

ஒரே ஒரு பாராளுமன்றவாதியாக இருந்து எதை சாதித்து விட முடியும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்?

இப்படி ஒவ்வொருவரும் தன்னை தனிமனிதனாக உணர்ந்து, தன்னால் இந்த சமூகத்திலும்,அரசியலிலும் என்ன பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும் என்று பின்வாங்கும் அதே வேளையில் தான், தனி மனிதர்கள் பலரும் சரித்திரங்களை புரட்டி போட்டதோடு ,சீர்கெட்ட இந்த சமூகத்தை தங்கள் செயல்பாடுகளால் அசைக்கவும், திரும்பி பார்க்கவும் வைத்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

உங்களையே மிக சிறந்த உதாரணமாக் சொல்லலாம். ஆட்சி,அதிகார அரசியலில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று நீங்கள் சொல்லிகொண்டாலும் கூட போராட்ட அரசியலில் நீங்கள் பெரிய சாதனையாளர் என்பதை யாரும் மறுக்க இயலுமா? தனி மனிதனாக என்னால் இதை சாதிக்க முடியுமா என்று என்றாவது உங்களை நீங்களே சந்தேகித்து கொண்டது உண்டா? ஆனால் இன்று அந்த சாதனை உங்களால் சாத்தியப்பட்டு இருக்கிறது.முகம் தெரியாத பலரால் கூட இன்று உலகம் முழுவதும் நேசிக்கப்படும் நபராக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.உங்கள் பணியை நீங்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கிறீர்கள். எந்த பிரதி பலன்களையும் எதிர்பாராமல் ஒரு கூட்ட மக்கள் உங்களோடு சேர்ந்து இருக்கிறார்கள்.

சமூகத்தின் பல தளங்களில் உள்ள அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர்களை,சமூக அக்கறை உள்ள மனிதர்களை, உடன் பணி புரியும் நபர்களை சந்தித்து கூடங்குளம் குறித்து பேசும் போதெல்லாம், போராட்டம் குறித்த சில கருத்துக்களில் அவர்கள் மாறுபட்டாலும் கூட, தனிப்பட்ட விதத்தில் உங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பதை கண்கூடாக கண்டேன் என்று உண்மையுடன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

புரட்சிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்த பல அரசியல் தலைவர்கள் தங்கள் போராட்டங்களின் வெற்றிகளுக்கு பிறகு அதிகார அரசியல் தங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கி தான் போனார்கள். ஆனால் விட்டார்களா மக்கள்? இல்லையே! மக்கள் விரும்பினார்கள் என்பதற்காக தங்கள் எண்ணங்களை,அவர்கள் மாற்றி கொள்ளவில்லையா? அதிகார அரசியலுக்கு வரவில்லையா? வந்த பிறகு அவர்கள் சாதிக்கவில்லையா?

அமெரிக்காவின் விடுதலைக்கு போராடிய ஜார்ஜ் வாஷிங்டன், ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட லெனின், கியூப விடுதலையை முன்னெடுத்த பிடல் காஸ்ட்ரோ, வியட்நாம் விடுதலையை முன்னெடுத்த ஹோசிமின் போன்றோர் தங்கள் போராட்ட அரசியலுக்கு பிறகு அதிகார அரசியலுக்கு வரவே இல்லையா? தாங்கள் விரும்பாவிட்டாலும் கூட, மக்களுக்காக அந்த பதவிகளை ஏற்றுகொண்டார்கள். ஏற்று கொண்ட பதவிகளில் கடைசி வரைக்கும் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

இந்திய விடுதலை கிடைத்து பதினைந்து ஆண்டுகள் ஆன பின்பு தான் பிரிடிஷ்காரனிடம் இருந்து விடுதலை பெற்றது மலேசியா.சிங்கப்பூர் எங்களுக்கு தேவை அற்றது,எங்களோடு அவர்கள் இணைந்திருக்க வேண்டாம் என்று மலேசியாவால் புறம் தள்ளப்பட்ட சிங்கப்பூரை பார்த்தால் இன்று எல்லோருக்கும் நம்பிக்கை பிறக்கிறது.

லீகுவான் என்ற ஒற்றை மனிதனால் அந்த தேசத்தை கட்டி எழுப்பவும், இன்று உலக அரங்கில் எல்லோரும் மதிப்புடனும், மரியாதையுடனும் திரும்பி பார்க்கும் அளவுக்கு அந்த நாட்டை உருவாக்க முடிந்து இருக்கிறது என்றால் அதற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அதிகார அரசியலோடு கூட சமூக மாற்றமும் தான் காரணம் என்பதை மறுக்க இயலுமா? முழுமையாக ஒரு நாட்டை, முன்னுதாரணமாக உருவாக்கி காட்ட ஒரு தனி மனிதனால் சாத்தியப்பட்டு இருக்கிறது என்பதை நாம் நாம் மறந்து விட இயலாது.

தனி நாடு கோரிக்கைகள் எல்லாம் இனி உள்ள காலங்களில் சாத்தியப்படாது என்று உலகம் நம்பிக்கை இழந்து சொல்லிகொண்டிருக்கும் போதே தான், இன்று தெற்கு சூடான் விடுதலை ஒரு கூட்ட மக்களுக்கு சாத்தியப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல கடந்த பத்து ஆண்டுகளில் உலக வரை படத்தில் புதிதாக ஐந்து நாடுகள், பல தேசிய இனங்களுக்கு சாத்தியப்பட்டு இருக்கிறது.. சமூக போராட்டமும்,அதிகார அரசியலும் ஒரு சேர கை கோர்த்து போகும் போது மட்டுமே வெற்றியை ஈட்டுவதற்கான கால அளவு குறையும் என்பது மறுக்க இயலாத உண்மை.

சமூக புரட்சியாளராக தமிழ் சமூகத்தால் பார்க்கப்படும் தந்தை பெரியார் அரசியலில் ஈடுபடவில்லையா? கட்சி சார்ந்த அரசியலில் அவர் இல்லையா? காங்கிரசில் இருந்தார்.பின்பு பிரிந்தார். தனி இயக்கம் கண்டார். அவர் கொள்கைகளை முன் வைத்து தான் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

இன்றைக்கும் கூட சமூகத்தில் நிகழ்ந்திருக்கும் பல மாற்றங்களுக்கு தந்தை பெரியாரின் விதையும், அதை வளர்த்த அண்ணா உருவாக்கிய தி.மு.க வுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது(கருணாவின் கையில் உள்ள தி.மு.க அல்ல)

அண்ணா கண்ட அந்த இயக்கம் இன்று கருணாக்களின் கைகளில் சிக்கி தமிழர் நலனுக்கு விரோதியாக, தமிழர் நலனில் அக்கறை இல்லாத இயக்கமாக, துரோகம் செய்யும் கட்சியாக, தன் குடும்பம் மட்டுமே வளர்க்கும் இயக்கமாக, பெரியாரின் கொள்கைகளை எல்லாம் தூக்கி எறிந்த கட்சியாக மாறிவிட்டது.ஆனால் இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கூட, பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கு நடைமுறைப்படுத்த அண்ணாவின் அதிகார அரசியல் தான் பயன்பட்டு இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியுமா?

முப்பது ஆண்டு கால தந்தை செல்வாவின் அகிம்சை அரசியலால் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை எனும் போது தான் பிரபாகரன் துப்பாக்கி ஏந்துகிறான்.

ஒற்றை துப்பாக்கியோடு தன் பதினெட்டு வயதில் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு காட்டுக்கு சென்ற பிரபாகரன் தன்னால் இது சாத்தியப்படாது என்று, அன்று அவன் நம்பிக்கை இழந்து இருந்திருந்தால் தமிழீழ விடுதலையை இவ்வளவு தூரம் முன்னெடுக்க பிரபாகரனால் முடிந்து இருக்குமா?

உலகில் முப்படையையும் கட்டி போராடிய முதல் விடுதலை இனம் என்ற பெருமையை தேடி தந்தான் பிரபாகரன்.ஜெனிவாவில்,உலக நாட்டு தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தும் போது, தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடியோடு ஆண்டன் பாலசிங்கம் பேசும் பெருமையை உருவாக்கி தந்தவன் பிரபாகரன். .

பிரபாகரன் போராட்ட அரசியலை மட்டும் முன்னெடுத்தாக நான் நினைக்கவில்லை. சாதியற்ற, சமத்துவ சமூகத்தை உருவாக்க முனைந்தான்.பெண்ணிய விடுதலையை, பெண்களை சமமாக மதிக்கும் மனப்பாங்கை உருவாக்கினான்.தனி மனித ஒழுக்கத்துக்கு உதாரணமாய் திகழ்ந்தான். பொருளாதார,அரசியல்,சமூக மாற்றங்களை உள்ளடக்கிய தமிழீழ விடுதலையையே பிரபாகரன் வென்றெடுக்க முயன்றான் என்பதை தான் வரலாறு பதிவு செய்து இருக்கிறது.அந்த விடுதலை நமக்கு இன்னும் சாத்தியப்படாமல் இருந்தாலும் கூட அவனுடய முப்பதாண்டு அரசியல்,சமூக போராட்டங்களை நாம் மறுக்க இயலாது.

இந்தியாவில் தமிழர் நலன் குறித்து பேசும் எந்த மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களையாவது அடையாளம் காட்ட முடியுமா?

ஒன்றை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். ஆயிரம் குறைகள் சொன்னாலும் மலையாளிகள் அரசாங்கத்திடம் இருந்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் சாதித்து வாங்கி கொள்கிறார்கள்.கேரளாவுக்கு போகாத தொடர்வண்டிகளே கிடையாது. நம்மை விட சிறிய மாநிலம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டிகளை விட கேரளாவுக்கு செல்லும் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கிட்ட தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு தொடர்வண்டி இருக்கிறது. காரணம் என்ன? அரசின் உயர் பதவி,மற்றும் அமைச்சர்கள் எல்லோரும் மலையாளிகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறார்கள். அதை செயல்படுத்தும் உயர் பதவிகளில் எல்லாம் அவர்கள் இருப்பதால் தான் இவை எல்லாம் அவர்களுக்கு சாத்தியப்படுகிறது.

கேரளாவில் சுற்று சூழலை மாசுபடுத்த எவராலும் இயலாது. அணு மின் நிலையங்கள் நிறுவ இயலாது. காரணம் உயர் பதவிகளில் இருக்கும் மலையாளிகள் தடுத்து நிறுத்தி விடுவார்கள். ஆனால் இங்கே அதை செய்யும் ஒரு தமிழனும் இல்லை. அது குறித்து பேசுவதற்கே ஆள் இல்லை என்பது தான் வருத்தமான விடயம்.

ஐயோ என் ஈழத்தமிழனை எல்ல்லாம் கொன்றொழித்து விட்டார்களே இந்த நாராயணன்களும், சிவ சங்கர் மேனன்களும் என்று நம்மால் கடைசி வரை புலம்பி கொண்டு தான் இருக்க இயலுமா? காரணம் வெளியுறவு துறை கொள்கையை தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறான் மலையாளி.

இப்படி அதிகார அரசியலை நாம் கையிலெடுக்க தயங்குவோமானால் கடைசி வரை யாரிடமாவது அழுது புலம்பி கொண்டு தான் நாம் இருப்போமோ?

நாற்பது மக்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் சார்பில் இருக்கிறார்கள். என்ன பிரயோஜனம் சொல்லுங்கள். யாரெல்லாம் உறுப்பினர் என்பதே தெரியாத அளவுக்கு தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. இவர்களை வைத்து கொண்டு யாரிடம் நம் குறைகளை போய் சொல்வது?

நம் சமூக போராட்டம் ஒரு புறம் நடக்கட்டும். நம் தேவை என்ன என்பதை அரசிடம் எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் சமூக மாற்றத்திற்கான நிதிகளை அரசிடம் இருந்து பெற்று தர நமக்கு அரசியல் அதிகாரம் என்பது கட்டாயம் தேவை.

நம் எதிரி யார்? நாம் யாரை எதிர்த்து போராட்டம் செய்ய போகிறோம்?. இந்த அரசை, இந்த நாட்டை தங்கள் வசம் வைத்திருக்கும் பெரும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நாம் போராட வேண்டி இருக்கிறது.அதிகாரங்கள் இல்லாமல் நாம் போராடும் போது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயங்களுக்கு, எடுத்துக்கொள்ளும் கால அளவு அதிகமாகும், இழப்புக்கள் அதிகமாகும்.

நீங்கள் அமைக்கும் போராட்ட இயக்க அரசியலில் உங்களோடு கரம் கோர்க்க நாங்கள் நிற்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. நீங்கள் அதிகார அரசியலையும் சேர்த்தே ஏற்றுக் கொண்டால், நம்முடைய நியாயமான போராட்டங்களுக்கு தேவையான பதில்கள் சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நீங்கள் ஏன் ஒரு அரசியல் முன்னுதாரணமாக இருக்க கூடாது? இந்த உதயகுமார் அண்ணனை பார்த்து நாளை பல உதயகுமார்கள் உந்துதல் பெறமாட்டார்களா?

ஒரு பாராளுமன்றவாதியாகி எதை சாதிக்க போகிறேன் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்து மட்டும் எதை சாதித்து விட முடியும் என்று பலர் சொல்லும் இதே நேரத்தில் தான் சகாயங்களும், தேவ சகாயங்களும்,உமா சங்கர்களும் நமக்கு நம்பிக்கை தருகிறார்கள். இந்த சமூகத்தில் இன்னும் கொஞ்ச பேர் ஈவு இரக்கத்தோடு மனிதனாய் வாழ்கிறான் என்பதை ஞாபகப் படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட சமூக மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். பணி இடமாற்றம் அவர்களின் நேர்மைக்கு ஒரு தண்டனையாக இருக்கலாம்.,ஏற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் நேர்மையில் எந்த குறைவும் இன்று வரை இல்லை என்பது கண்கூடு.

சகாயங்களையும், உமா சங்கர்களையும் சிலாகித்து பேசும் இதே மக்கள் கூட்டம் தான், அண்ணன் உதயகுமாருக்கு அரசியல் வேண்டாம் அது சரிப்படாது என்று வாதிடுகிறார்கள். எனக்கு புரியவில்லை எப்படி இந்த முரண்பாடு வருகிறதென்று?

உலக நாடுகள் பலவற்றில் இந்தியா போன்ற தேர்தல் பிரசாரங்கள் இல்லை.சுவரொட்டி விளம்பரங்கள் இல்லை, எங்கு பார்த்தாலும் திருவிழா கூட்டம் போல பிரியாணியும், மதுவும் கொடுத்து மக்களை கூட்டுவதில்லை. லட்சம் பேரை திரட்டி மாநாடுகள் நடத்தப்படுவதில்லை. அரசியல் தலைவர்கள் நகரங்களை ஆக்கிரமித்து மக்களுக்கு சிக்கல்களை கொடுப்பது இல்லை.ஆனால் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களை மாற்றுகிறார்கள். கூச்சல்கள் இல்லை.

இந்த அரசியல் முறைகள், பிரசார வியூகங்கள், தேர்தல் செலவுகள் இவை எல்லாவற்றையும் மாற்றும் வேலையையும் நாம் சேர்த்தே செய்வோம். பிரசாரங்களுக்கு செய்யும் செலவை வைத்தும், வாக்குக்கு கொடுக்கும் பணத்தை வைத்தும் வெற்றிகளை தீர்மானிக்க இயலாத வகையில் உங்கள் வெற்றியை தீர்மானிக்க நாங்கள் எல்லாவிதத்திலும் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம். உங்கள் வெற்றியில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் தேர்தல் அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்து பாருங்கள். ஆனால் நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுத்தாலும் உங்களோடு களம் இறங்கி போராட நாங்கள் இருக்கிறோம். எங்களின் புரிந்து கொள்ளலில் தவறுகள் இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள்.

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக