புதன், 15 ஜனவரி, 2014

நெய்தல் குழந்தைகளின் வலி!


ஏன் இந்த மணல் கொள்ளை பிரச்சினை குறித்து கடுமையாக எழுதுகிறார்?சார்ந்திருக்கும் கட்சியை கூட,இந்த பிரச்சினையில் கடுமையாக விமர்சிக்கிறார்!

இந்த ஒற்றை பிரச்சினையை மட்டுமே வைத்து, ஒரு கட்சியையோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களையோ முடிவு செய்ய இயலுமா?அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எல்லா மக்கள் பிரச்சினைகளையும் கையிலெடுக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க இயலும்?அதெல்லாம் சாத்தியம் தானா?இப்படி பல கேள்விகள்!

இந்த மணல் கொள்ளை பிரச்சினையின் ஆழமும், அகலமும், நடைபெற்று கொண்டிருக்கும் பிரிவினைவாத நிகழ்வுகளும், அதனால் ஏற்படப் போகும் பின் விளைவைகளும்,அதன் வலியும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்து மக்களுக்கு மட்டுமே புரியும். நான் நெய்தல் நிலத்தில் பிறந்து,தவழ்ந்து,ஆடி ஓடி விளையாடிய செல்லப்பிள்ளை. அந்த வாழ்வியலுக்குள் முழுமையாக இருப்பவன்.எங்கள் வாழ்வியல் சிதைக்கப்படும் போது இயல்பாக எழும் வலியே எனக்கும்! 

விவசாயிகள் பிரச்சினைக்கு கட்சி தலைவர்கள் வருகிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள். குரல் கொடுக்கிறார்கள். கொங்கு மணடலத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால், கெயில் போன்ற அரசு நிறுவனங்கள் குழாய்கள் பதித்தால் ,அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அவர்களின் விளைநிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள்.

மீன்பிடித்தல் என்பதும் ஒரு கடல் விவசாயம் தானே.அவர்கள் வாழ்வின் ஆதாரமே அது தானே. அப்படியானால் அந்த வாழ்வாதாரத்தை சிதைப்பவர்களை எதிர்த்து மற்றவர்கள் கேள்வி கேட்க வேண்டும், இந்த எதிரிகளை எங்கள் மண்ணில் இருந்து துரத்த வேண்டும்,அரசியல் அதிகாரங்கள் எதுவும் இன்றி எதிர்த்து கேட்பார் யாருமின்றி, நிற்கதியாய் நிற்கும் இந்த ஒடுக்கப்பட்ட பட்ட பிள்ளைகள் அப்படி எதிர்பார்க்கத் தானே செய்வார்கள். அதில் ஒரு நியாயம் இல்லாமல் இல்லையே!அரசியல் அதிகாரம் நிறைந்த,ஜாதிய அரசியல் செய்யும் மக்களிடம் இது போன்ற சட்ட விரோத செயல்களை,சமூக விரோதிகளால் செய்ய இயலுமா? 

இத்தனை தலைமுறைகளாக ஒற்றுமையோடு மீன்பிடித் தொழிலை செய்து வந்த மீனவர் சமூகம் இன்றைக்கு எதிரும் புதிருமாக பிளவு பட்டு நிற்கிறது.அண்ணனும் தம்பியும் வெட்டி சாய்த்துக் கொள்ளும் அளவுக்கு பகை வளர்ந்து இருக்கிறது.சமூக விரோதிகள் சிலர் போடும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு பிரிவினைவாதம் ஓங்கி நிற்கிறது.சமூக ஒற்றுமை சீர் குலைந்து போய் இருக்கிறது. எந்நேரமும் ஒரு கலவரம் ஏற்படலாம் என்ற கவலை ஓங்கி இருக்கிறது. அப்படி ஒரு கலவரம் நேருமானால் சண்டைகள் யாருக்குள் நடக்க போகிறது? பலியாகப்போகும் உயிர்களும் மீனவர்களின் உயிராகத் தானே இருக்க முடியும்.

மீனவர் சமூகத்துக்குள்ளேயே,பங்காளிகள் சண்டையிட்டு வெட்டி சாகப் போகிறார்கள். வீரத்தோடும்,தீரத்தோடும் அன்றாடம் கடலை எதிர்த்து போராடுவதையே வாழ்க்கையாக கொண்ட ஒரு சமூகம்,ஏழைகளாக இருந்தாலும் உண்மையோடும், மானத்தோடும் வாழப் பழகிய ஒரு சமூகம்,இன்றைக்கு சிந்திக்க மறந்து,எதிர்காலம் குறித்த எந்த கவலையும் இன்றி, வயிறு நிறைந்தால் போதும் என்னும் அளவுக்கு அடியாட்களாகவும்,எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருப்பதை பார்க்கும் போது,நிச்சயமாக ஒரு வலி மிகுந்த வேதனை என் போன்ற பலரின் நெஞ்சங்களை துளைத்தெடுப்பது இயல்பானது. 

கடலும்,கடல் சார்ந்த பகுதிகளும் வெறும் அழகியல் காட்சிகளாக மட்டுமே பலருக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல.அது எங்கள் வாழ்வியல்.கடல் தான்,மீனவர் சமூகத்தின் இன்றைய அத்தனை வளர்ச்சிக்கும்,எல்லாவற்றுக்கும் மேலாக என் போன்ற இன்றைய முதல்தலைமுறை பிள்ளைகளின் கல்விக்கும் சோறு போட்ட தாய். 

நேற்று வரைக்கும் ஊருக்குள் ஆயிரம் சண்டைகள் இருந்தாலும்,சகோதரர்கள் பலர் அடித்துக் கொண்டாலும்,அது அவரவர் தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக மட்டுமே இருக்குமேயல்லாமல், வேறு எவருக்காகவும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததில்லை. 

ஆனால் கடந்த சில வருடங்களாக தான்,இந்த மணல் மாபியாக்கள் கடற்கரைக்குள் நுழைந்த பிற்பாடு தான்,இந்த போக்கு மாறி, இன்று ஒற்றுமைக்கு பங்கம் வந்து நிற்கிறது. பங்காளி சண்டையில் இன்று பல மீனவர் கிராமங்கள்,கடல் தொழில் செய்ய இயலாமல், நாடோடிகள் போல இடம்பெயர்ந்து நிற்கிறார்கள்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த ஒரு சமூகம் இப்படி கத்தியோடும், கம்புகளோடும் கலவரத்துக்கு தயாராக நிற்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக மட்டும் என்னால் பார்க்க இயலுகிறது. 

வெறும் தாது மணல் பிரச்சினையாக மட்டும் இதைப் பார்த்தால் இது புரியாது.கடலுக்கும் எங்கள் வீடுகளுக்கும் நூறு மீட்டர் தூரம் மட்டுமே இடைப்பட்ட தூரமாய் இருக்கும்.கன்னியாகுமரி,நெல்லை மாவட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கு நீங்கள் போய் பார்த்தால் இது தெரியும். 
தாது மணலை இந்த மணல் மாபியாக்கள் திருடுவதால்,கதிரியக்க பாதிப்புகள் என்பதை தாண்டி கடல் அரிப்பு மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் கேள்விக்குள்ளாகும். எங்களின் நாளைய வாழ்வு கேள்விக்குள்ளாகும்.எண்பது லட்சம் கோடி என்ற பொருளாதார ஊழலைத் தாண்டி,இதன் உண்மையான பாதிப்புகள் குறித்த நீண்ட விளக்கங்கள் புதியதலைமுறை மற்றும் கேப்டன் தொலைக்காட்சி காணொளிகளில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே இந்த தாது மணல் கொள்ளையை பொருளாதார ஊழல் என்ற கணக்கோடு மட்டும் பார்க்காமல்,எங்கள் அழகிய வாழ்வியலோடு தொடர்பு படுத்தியும், சமூக ஒற்றுமை சீர்கேடு, தேவையில்லாத கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள், எதிர்கால சந்ததியின் நிலை,வாழ்வியல் மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களை கணக்கில் கொண்டு பேசுவதால் தான்,இந்த வலியை என் போன்ற நெய்தல் நிலத்து பிள்ளைகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

விவசாயிகளின் விளை நிலங்களை,அவர்களிடம் இருந்து முறையற்ற விதத்தில் யாரவது கையகப்படுத்தினால் என்ன கோபம் வருமோ,அதே கோபம் தான் கடலையும்,கடல் சார்ந்த நிலங்களை அழிப்பவர்களையும் பார்க்கும் போது நெய்தல் நிலத்தின் பிள்ளைகளுக்கு வரும்! 

என் வலி புரிந்தவர்களுக்கு மட்டும் புரியட்டும்!

மீனவர்கள் சமூகம் என்று நான் குறிப்பிட்டவுடன் இதை குறிப்பிட்ட ஜாதிய,மத ரீதியான பற்று என்று நீங்கள் தவறாக புரிந்து கொள்வீர்கள் என்றால் மன்னிக்கவும். மீனவர்களில் பல மதத்தினர் இருக்கிறார்கள், பல சாதியத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை சென்னை முதல் கேரளா எல்லை வரை உள்ள மீனவர்களின் கிராமங்களுக்கு சென்று பார்த்தால் புரியும். நான் சமூகம் என்று குறிப்பிடுவது சாதிய ரீதியாக அல்ல, மாறாக கடல் தொழில் செய்யும் ஒட்டு மொத்த மீனவர் சமூகம் என்றே குறிப்பிடுகிறேன். 

எப்படி விவசாயிகள் அனைவரும் ஒரே சாதியோ, ஒரே மதமோ இல்லையோ அதைப் போலவே கடலை சார்ந்த மக்களும் இருக்கிறார்கள் என்பதை புரியாதவர்கள் புரிந்து கொள்ளட்டும். 

எங்கள் வாழ்வியலை சிதைப்பவர்களின் மீதும்,எங்கள் துயரங்களில் பங்கு கொள்ளாதவர்கள் மீதும் எழும் நியாயமான கோபமே,என் இயல்பான கோபமும்!

-ஆன்டனி வளன்

குறிப்பு: 

இந்த கட்டுரை “புதிய தரிசனம்” என்ற மாதமிருமுறை இதழிலும் வெளி வந்துள்ளது! 

அதற்கான இணைப்பு இதோ!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக