திங்கள், 20 ஜனவரி, 2014

நீயா நானா விவாதம் குறித்த ஒரு பார்வை!


நீயா நானா ?

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளி பரப்பாகும் 'நீயா நானா' பற்றிய ஒரு கண்ணோட்டம். 

ஆரம்ப நாட்களில், இந்த நிகழ்ச்சி சற்று சிந்திக்க தக்க வகையில் அமையப்பெற்றது என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். வேறு எந்த தமிழ் தொலைக்காட்சிகளிலும் கூட,இது போன்ற விவாத நிகழ்ச்சிகள்,இன்று வரை நடை பெறுவதாக எனக்கு தெரியவில்லை.வெகுஜன மக்களை,வெகுவாக கவர்ந்த இந்த நிகழ்ச்சி காலப்போக்கில்,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மிகவும் தரம் இழந்து நிற்கின்றது.

ஒரு விவாதம் என்பது, சில நல்ல கருத்துக்களை மக்களிடம் விதைத்து செல்ல வேண்டும்.மக்களை அது குறித்து சிந்திக்க வைக்க வேண்டும். 

உதாரணமாக சொல்வதென்றால்,அமீர்கான் நடத்திய சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சியை சில முறை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.சத்திய மேவ ஜெயதேயில், சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை விவாதித்தார்கள். பிரச்சினைகளுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார்கள்.பிரச்சினை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள பலரை(ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,பிரபல அரசு மருத்துவர்கள், இந்திய ஆட்சியாளர்கள்) நேரடியாக விவாதத்துக்கு அழைத்து வந்தார்கள். பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன என்பதை விவாதித்து ஆவன செய்வதாக சொன்னார்கள்.இது தான் ஒரு நல்ல விவாதத்துக்கான விதி. மக்கள் மனதில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாத நிகழ்ச்சி என்பது,என்னை பொறுத்த வரை கண்டிப்பாக ஒரு வீணான நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியும். 

சத்யமேவ ஜெயதே போல நீங்கள் எந்த தீர்வுகளை, எட்டாவிடாலும் கூட பரவாயில்லை.குறைந்தபட்சம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளும் தலைப்புகளாவது, சொல்லிகொள்ளும் படியாக இருக்கிறதா என்றால், ஐயோ, மிகப்பெரிய கொடுமை! விவாதிக்கும் தலைப்புகளை கேட்டாலே வாந்தி வரும் அளவுக்கே இவர்களின் சிந்தனை இருக்கிறது.

ஐந்து சதவிகித தலைப்புக்கள் மட்டும் தான் விவாதிக்க தகுதி உள்ள தலைப்புக்கள். மற்ற அனைத்துமே குப்பைகள். 

உதாரணத்திற்கு சில தலைப்புகள்:

*ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்ன?
*பெண்களிடம் ஆண்களுக்கு பிடித்தது என்ன? 
*காதலுக்கு எது முக்கியம் அறிவா? அழகா ?

இந்த மூன்று தலைப்புகளையே,முப்பது தலைப்புகளாக மாற்றி முப்பது வாரம் விவாதிகிறார்கள். 

*கருப்பான ஆண்களை பிடிக்குமா? 
*சிவப்பான ஆண்களை பிடிக்குமா?
*கட்டுமஸ்தான உடலிருக்கும் ஆண்கள் பிடிக்குமா? 
*சாதாரணமான ஆண்கள் பிடிக்குமா?
*மீசை வைத்திருக்கும் ஆண்களா? மீசை இல்லாத ஆண்களா?
*புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் ஆண்களா? இல்லாவிட்டால் புகை,மது எதுவும் அற்ற ஆண்களா? 
*உயரமான ஆண்களா? அல்லது உயரம் குறைவான ஆண்களா? 

*பெண்களின் எந்த உடை உங்களை கவர்ந்தது?
*அழகு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தும் பெண்களை பிடிக்குமா? அதிக அழகு சாதனங்கள் பயன்படுத்தாத பெண்களா? 

*காதலை வெளிப்படுத்த வழிகள் என்ன ?
*காதலை வெளிப்படுத்த எந்த நேரம் சிறந்தது?
*காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் பரிசுகள் என்னென்ன?
*கல்லூரிகளில் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை என்னென்ன?

வருடத்தின் 52 வாரங்களில் 90 சதவிகித தலைப்புகள் இப்படி தான் இருக்கிறது. 

மீதமிருக்கும் இருக்கும் வாரங்களில் 

*எண்கணிதம் உண்மையா?
*ஜோதிடம் உண்மையா?
*ஜாதகம் உண்மையா?
*சாமியார்கள் தேவையா?
*ஆன்மீக குருக்கள் தேவையா?

இந்த தலைப்புகளை பார்த்தாலே, கொஞ்சம் நஞ்சம் சிந்திக்கும் மக்களை கூட சிந்திக்க விடாமல்,முட்டாள்களாக்கி உட்கார வைக்கும் வேலையை தான் இது போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து செய்கின்றன.

நாட்டின் பிரச்சினைகள் குறித்தும் செய்தி படிக்கவோ,பார்க்கவோ மக்களில் பெரும்பாலானோருக்கு நேரம் இல்லை. இது போன்ற மக்களை சென்றடையும் விவாத நிகழ்ச்சிகளாவது, ஒரு சில நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கும் என்று பார்த்தால், இவையும்  எதற்கும் உதவாத குப்பைகளாகவே இருக்கின்றன. 

நாட்டில் கொழுந்து விட்டு எரியும்,எந்த பிரச்சினைகளையும் கையிலெடுக்க எந்த ஊடகங்களுக்கும் தயாராக இல்லை.மேலே நாம் சொன்ன சில தலைப்புகளை முன் வைத்தோமா,விவாதம் என்ற பெயரில் இரண்டு மணி நேரம் அரட்டை அடித்தோமா, காசு பார்த்தோமா, இதை விட வேறென்ன வேண்டும்? இப்படித் தான் இருக்கிறது!

இன்றைக்கு ஊடகம் என்பது, அதற்கான எல்லா அடையாளங்களையும் மறந்து விட்டு, பொய் செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் , நல்ல செய்திகளை வெளியிடாமல் மறைப்பதிலும், நடுநிலை தவறி ஒருசார்பு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தான் முனைப்பு காட்டுகின்றன. பத்திரிக்கைகளும் சரி, காட்சி ஊடகங்களும் சரி இரண்டும் பெரும்பான்மையாக இதையே செய்கின்றன.

தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால்,அனைத்தும் கள்ளக்காதல்,இரண்டு மனைவி கோட்பாடுகள்,குடும்ப சண்டைகள், அழுகைகள்.ஆக குடும்பங்கள் உட்கார்ந்து பேசும் நேரம் குறைத்து,தொலைக்காட்சியின் முன் மக்களை அமரவைத்து, தன் வக்கிரங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதோடு, குடும்பத்தின் அன்னியோன்யத்தை குலைக்கும் வேலையை தான் அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து செய்கின்றன. 

ஆட்சியாளனை எதிர்த்து எழுத உங்கள் கைகள் நடுங்குமென்றால், பேசுவதற்கு உங்கள் நாக்குகள் தடுமாறுமென்றால், நீங்கள் என்ன பத்திரிகையாளர்கள்? தைரியம் இல்லாதவர்கள் எதற்கு,ஊடக துறைக்கு வருகிறீர்கள்? சும்மா சினிமா துணுக்கு எழுதவும், கோடம்பாக்க நிகழ்வுகளை எழுதுவதுமா பத்திரிக்கையாளனின் வேலை? சமூக பொறுப்பு தான் பத்திரிகையாளனுக்கும்,ஊடகதுறைக்குமான அடிப்படை தகுதி. 

சமீபத்தில் நீயா நானா விவாதத்தில்,சினிமா துறை சேர்ந்த ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தார்கள். சினிமாவில் 60 வயது தாண்டிய முதியவர்கள் பலர் இன்னும் 20 வயது குமரிகளோடு நடிக்கிறார்கள். ஆனால் சீனிவாசன் என்ற அந்த நடிகரிடம்,அந்த மனிதரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, அவரிடம் அடுக்கடுக்காக பல ஏளனமான கேள்விகளை கோபிநாத் முன் வைக்கிறார்.அந்த மனிதனும் சிரித்து கொண்டே பல பதில்களை சொல்லுகிறார். அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் அவரை அந்த அளவுக்கு அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் என்ன? இது தான் கோபிநாத்தின் கற்று கொண்ட பண்பாடா? கோபிநாத்திற்கு தைரியம் என்ற ஒன்று இருந்தால், சீனிவாசனிடம் கேட்ட அதே கேள்விகளை ரஜினியிடமோ, கமலிடமோ கேட்க முடியுமா?

ஜெயலலிதா வரும் வாகனத்தின் சக்கரங்களை, தொட்டு கும்பிடும்,அண்ணா திமுக தோழர்களை பற்றி,ஏன் உங்கள் தொண்டர்கள் சுயமரியாதை அற்று இப்படி செய்கிறார்கள்? இது தவறு இல்லையா என்று ஜெயலலிதாவை பார்த்து கேட்பீர்களா? 

உங்கள் திராணி எல்லாம்,ஊருக்கு எளியவனை அசிங்கப்படுத்தி கைதட்டல் வாங்கி விட வேண்டும். அவ்வளவு தானே!.  என்ன ஒரு கொள்கை. சென்னையில் 40 டிகிரி வெயில் என்றாலும், வேர்த்து ஒழுகினாலும் உங்கள் பண்பாட்டு உடையான கோர்ட்டையும்,சூட்டையும் அணியாமலா வருகிறீர்கள் திரு.கோபிநாத்? இப்படி கோர்ட்டும் சூட்டும் அணிந்து கொள்ளும் நீங்கள்,அடுத்தவரின் உடை குறித்து கேலி செய்ய என்ன தகுதி இருக்கிறது?

கோபிநாத் என்ற மனிதன் நல்ல செய்தி சேகரிப்பவனாக ,நல்ல தொகுப்பாளனாக இருந்து விட்டால்,உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளன் என்றோ ,உலகின் சிறந்த அறிவாளி என்றோ அர்த்தம் அல்ல. பிரபலமாகிவிட்டால் நாம் எது வேண்டுமென்றாலும் பேசலாம்,மக்கள் கேட்பார்கள் என்ற அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. நீங்கள் பிரபலமாகாத செய்தியாளராய் இருந்த காலத்தில் இருந்தே உங்களை நாங்கள் அறிவோம். கடந்து வந்த பாதைகளை கவனித்து நிதானமாய் நடப்பது நல்லது. 

*தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினையான மின் தடை குறித்த விவாதங்கள் நடந்திருக்கிறதா? 
*மாற்று எரிசக்தி குறித்த விவாதங்கள் உண்டா? 
*ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் கூடங்குளம் அணு உலை போராட்டம் குறித்த விவாதம் நடந்திருக்கிறதா? 
*அணு மின்சாரம் குறித்த நியாயமான விவாதங்களோ அணு உலை இல்லாத வளர்ந்த நாடுகளை குறித்த விவாதங்களோ நடந்திருக்கிறதா?
*முல்லை பெரியாறு போராட்டம் பற்றி விவாதித்து இருக்கிறீர்களா?
*பாபர் மசூதி இடிப்பு குறித்த விவாதித்து நடந்திருக்கிறதா ?
*சேது சமுத்திர திட்டம் குறித்து விவாதித்து இருக்கிறீர்களா?
*அண்டை மாநிலமான ஆந்திராவில் பல ஆண்டுகளாக நடக்கும், தனி மாநில பிரச்சினை குறித்த விவாதித்து இருக்கிறீர்களா?

*ஈழ விடுதலை குறித்த விவாதம் நடந்திருக்கிறதா?
*இனப்படுகொலை காட்சி குறித்து உலக நாடுகள் எல்லாம் விவாதிக்கும் போது,இங்கு அது போன்ற விவாதம் நடந்து இருக்கிறதா?
*போர் மரபுகள், சர்வதேச போர்குற்றங்கள் குறித்த விவாதங்கள் நடந்திருக்கிறதா?
*மாவோயிஸ்ட் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் உண்டா?
*அரசியவாதிகளின் கொள்ளைகள் குறித்த விவாதங்கள் உண்டா?
*உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள்,நீதிமன்றங்களை அவமதிப்பது குறித்த விவாதங்கள் உண்டா?
*மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்ய, ஆட்சியாளர்களை அணுகுவது குறித்த விவாதம் உண்டா?
*தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விவாதம் உண்டா?
*அந்நிய முதலீடு குறித்த விவாதம் உண்டா?
*அந்நிய முதலீட்டை கொண்டு வந்தே தீருவோம் என்ற கட்சிகள் குறித்த விமர்சனகளும் விவாதங்களும் உண்டா?
*அரசு மருத்துவமனைகள் குறித்த விவாதம் உண்டா?
*தமிழ்நாட்டில் பரவும் தொற்றுநோய் வியாதிகள் குறித்த விவாதம் உண்டா?
*மணல் கொள்ளை போன்ற இந்த நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடும் கொள்ளையர்கள் குறித்த விவாதங்கள் உண்டா?

சொன்னால் சொல்லிகொண்டே போகும் அளவுக்கு அத்தனை பிரச்சினைகள் இந்த நாட்டில் இருக்கின்றன. அதை எல்லாம் விட்டு,விட்டு எப்போது பார்த்தாலும் காதல், அழகு, இவை தான் இந்த தேசத்தின் தலையாய பிரச்சினை போலவும்,இது போன்ற தலைப்புகளை மட்டுமே முன்னெடுத்து விவாதம் என்ற பெயரில் நடத்தும் கோபிநாத், மற்றும் ஆன்டனி போன்றவர்களுக்கு இதை தாண்டி சிந்திக்க தோன்றாதா?

அந்த நிகழ்சிகளில் பங்கெடுக்கும் பலர் தமிழ் பேசவே கூச்சப்படுகிறார்கள்.
இவர்கள் பிறந்ததெல்லாம்,அமெரிக்காவும்,வளர்ந்ததெல்லாம் லண்டன் போலவும் எப்போதும் ஒரு பிதற்றல். சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி மக்களின் சொந்த ஊர் அம்மாபட்டியும், வடுகபட்டியும் தான் என்பதை மறந்து விடகூடாது.  எதோ சென்னைவாசிகள் என்றவுடன் கொம்பு எதுவும் தனியாக முளைத்து விடவில்லை.

தமிழ் வாசிக்க தெரியாத பலர் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கலாமே ஒழிய தமிழில் பேசத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் கூட  விவாதத்தில் பங்கெடுப்பவர்களுக்கு தமிழில் பேசுவது என்பது ஒரு கவுரவ குறைச்சல் போலவும்,ஆங்கிலம் பேசினால் தான் அறிவாளிகள் என்பது போல, பெருமிதம் கொள்வதும் காண சகிக்க இயலவில்லை.இதில் கோபிநாத் வேறு ஆங்கில கலப்பிலும்,மிதப்பிலும் தான் பேசுகிறார். எங்க போய் சொல்றது? தன் தாய் மொழியில் சரளமாக எழுதவும்,பேசவும் தெரியாத மக்கள் தான் தங்களின் நிலை  குறித்து வெட்கி தலை குனிய வேண்டும். ஆனாலும் எந்த வெட்கமும் இல்லாமல் வெட்கமே இல்லாமல் பெருமை பீற்றி கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட இனம்.

அது குறித்த கவலை பெரும்பான்மை மக்களுக்கு இருந்ததாக தெரியவில்லை. எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்தால் போதும் என்ற மனநிலை. அதை விட ஆங்கிலம் தான் உயர்வு என்ற மன நிலை.பிள்ளைகள் தங்களை மம்மி, டாடி என்று அழைப்பதை தான் பல தமிழ் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.இதை விட வேறன்ன அசிங்கம் வேண்டும்? 

உற்று கவனித்தால் இந்த நிகழ்சிகளில் வரும் ஆண்களையும்,பெண்களையும் கோர்த்து விடும் வேலையை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மேடையில் கோபிநாத் செய்கிறார். அந்த பையன புடிச்சிருக்கா? இந்த பெண்ணை பிடிச்சிருக்கா? அந்த பையனிடம் எப்படி காதலை போய் சொல்வீர்கள் ? இதற்கு தானா இந்த விவாத களம்?. சீ…..

இன்னும் ஒரு கொடுமை, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் பலரை பேச விடுவதே இல்லை.உப்புக்கு சப்பாக பொம்மைகளாக உட்கார வைத்து அனுப்பி விடுகிறார்கள்.அறிமுகம் செய்ததோடு சரி,விவாதத்தில் பேசாமலே திரும்பும் பலரை பார்க்க முடிகிறது. 

இதையெல்லாம் தவிர்த்து விட்டு நல்ல தலைப்புகளை தேர்ந்தெடுங்கள்.சிந்திக்க தூண்டும் விவாதங்களை கோபிநாத் முன்னெடுத்தால் எல்லோருக்கும் நல்லது. 

-
ஆன்டனி வளன்
அக்டோபர் 16,2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக