புதன், 15 ஜனவரி, 2014

இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!


இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தும் திரு.சகாயம் ஐ.எ எஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எத்தனை முறை என்னை பணி மாற்றம் செய்தாலும், இடமாற்றம் செய்தாலும் எவர் காலையும் அண்டி பிழைக்க மாட்டேன். என் பணிமாற்றத்தை தடுப்பதற்காக, எவருக்கும் நான் துதி பாட மாட்டேன்.

உங்கள் பணி மாற்றமும், இடமாற்றமும் என் நேர்மையை ஒன்றும் செய்து விட இயலாது.நீங்கள் என் நேர்மைக்கு தண்டனையாக தரும் பணிமாற்றங்களும், இடமாற்றங்களும் என் நெஞ்சுறுதியை ஒரு போதும் சிதைக்காது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறார் அய்யா. சகாயம் ஐ.எ.எஸ்.

போகின்ற இடங்களில் எல்லாம் அதிரடியான நடவடிக்கைகள் தான்.
அது நாமக்கல் என்றாலும், மதுரை என்றாலும், கோவை என்றாலும் அல்லது கோ ஆப்டெக்ஸ் என்றாலும்!

மதுரை கிரானைட் மலை முழுங்கிகளை கையும் களவுமாக பிடித்தார். ஆயிரக்கணக்கான கோடிகளில் முறை கேடுகள் நடக்கின்றன என்று வெளியுலகுக்கு சொன்ன பெருமகனார். கொலைகாரனுக்கும், கொள்ளைகாரனுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தண்டனைக்கு பதிலாக, இந்த கொள்ளை கூட்டத்தை கண்டு பிடித்து அம்பலப்படுத்திய அய்யா சகாயத்துக்கு தண்டனையாக உடனே பணி மாற்றம்.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் லட்சணம் இது தானே! அது ஜெயலலிதாவாக இருந்தாலும் கருணாநிதியாக இருந்தாலும், நடவடிக்கை என்னவோ ஒன்று தான். காரணம் களவாணிகளோடு கூட்டுக் களவாணிகள் ஆயிற்றே! உமாசங்கருக்கு நிகழ்ந்ததும் இப்படித் தானே. பணி நீக்கம் செய்து பார்த்தார்கள். ஆனால் மடியில் கனம் இருந்தால் தானே பயப்படுவதற்கு!

என்னத்த பெருசா செய்திட போகிறார் சகாயம் என்று எகத்தாளம் செய்து,ஒன்றுக்கும் உதவாது என்று, அரசு கருதிய கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குனராக பணி மாற்றம் செய்தார்கள்.

ஆனால் நேர்மையாளன் சும்மா இருப்பானா? இதற்கு முன்பு கோஆப்டெக்ஸ்-இல் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து அலசி ஆராய்ந்தார். ஏற்கனவே அறிக்கைகள் பலவற்றை தாக்கல் செய்தார்.

அது ஒரு புறம் நடந்து கொண்டே இருக்க, கோ ஆப்டெக்ஸ்-இன் வருமானத்தை எப்படி பெருக்குவது என்று சிந்தித்து செயல்பட்டதன் விளைவு தான் கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளில் வந்த விளம்பரம்.

ஆம் தனியார் ஜவுளி நிறுவங்களை போலவே, கோ ஆப்டெக்ஸ்-உம் இனி மக்களின் விருப்பதிற்கேற்ப, ஆடைகளை வடிவமைத்து தரும் என்ற விளம்பரம்.

திருமண வைபவங்களுக்காக மணமகன்,மணமகள் புகைப்படங்களை தாங்கிய பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் வடிவமைத்து தருவோம் என்று சொல்லி இருக்கிறது கோ ஆப்டெக்ஸ் நிறுவனம்.

தனியார் நிறுவன ஊழியர்களின் மார்கெட்டிங் உத்தி போலவே, பல்வேறு திருமண வைபவங்களுக்கு கோஆப்டெக்ஸ் ஊழியர்களும் நேரடியாகவே சென்று திருமணத்திற்கு வருபவர்களிடம், கோஆப்டெக்ஸ் குறித்த புதிய உத்திகளையும், பட்டு புடவைகளின் பல்வேறு புதிய விளம்பரங்களையும் சொல்லி ஆர்டர் பிடிக்கும் வேலையையும் செய்ய கட்டளை இட்டு இருக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாததை விட வளர்ச்சியில் முன்னோக்கி பயணிக்கிறது கோஆப்டெக்ஸ்.

நல்லது செய்ய வேண்டும், லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், பொது சொத்துக்களை தனியார் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், இதற்கு எதிராய் யார் வந்தாலும், நான் எதிர்க்க தயங்க மாட்டேன் என்ற உங்களின் உறுதி மொழி மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடமாய் அமையட்டும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

விளக்கம் :

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

உங்கள் நேர்மைக்கு நாங்கள் சாட்சி!

ஐ.எ.எஸ் அதிகாரிகள் பலருக்கு முன்னுதாரணமாய் விளங்கும், அய்யா சகாயம் ஐ.எ.எஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் அதிரடி!


-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக