வியாழன், 16 ஜனவரி, 2014

பாசமிகு நண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!











நாடாளுமன்ற வேட்பாளர் தளத்திற்கு முன்னேறி செல்லும்,என் பாசமிகு நண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 

அட என்ன வளன்! நம்மளும் எத்தனை காலத்துக்கு தான் இந்த அரசியல் பேசிக் கொண்டே இருப்பது?கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக,நீங்களும் நானும் அரசியல் பேசுகிறோம். பொறியியல் கல்லூரி நாட்களை எண்ணிப் பார்த்தீர்களா?

பொறியியல் இரண்டாம் ஆண்டு முதல், இறுதி ஆண்டுவரை(1996-1999) நம் ஆய்வக வகுப்புகளில்,ஓய்வு நேரங்களில் என்று அன்று தொடங்கிய அரசியல் பேச்சுக்கள் இன்று வரை ஓயவில்லை. தி.மு.க, அண்ணா திமுக குறித்தும், காங்கிரஸ் பாரதிய ஜனதா குறித்தும் நாம் செய்த கடுமையான வாதங்கள் எல்லாம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!தேசிய அரசியல் குறித்தும், குறிப்பிட்ட சில தேசிய அரசியல் தலைவர்கள் குறித்து சிலாகித்தும், பழித்தும் பேசிய நாட்கள் எல்லாம் மறக்கவில்லை.

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் நாம் இப்படியே பேசிக் கொண்டே இருக்க? அதான் களத்தில் இறங்கி விட்டேன்! நெஜமாவா, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன்!

ஆம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்!என் சித்தாந்தகளுக்கு ஒவ்வாத கட்சி தான்! ஆனால் எனக்கு வேறு வழியும்,வாய்ப்பும் தெரியவில்லை! இன்றைய சூழலில் அரசியலில் தேர்தலுக்கு செலவு செய்ய என்னிடம் பணம் இல்லை, மிகப்பெரிய ஆள் பலம் இல்லை. ஆனால் ஏராளமான நம்பிக்கை மட்டும் இருக்கிறது!

என் தகுதி எல்லாம் பொறியியலில் இளநிலை பட்டமும்,வணிகம் மற்றும் நிர்வாகவியலில் முதுநிலை பட்டமும் இருக்கிறது!முன்பு சில முன்னணி நிறுவனங்களிலும்,தற்போது ஒரு கல்லூரியிலும் பேராசிரியராக பணியாற்றுகிறேன்.ஓரளவுக்கு அரசியல் தெரியும், தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும்!இறைவன் புண்ணியத்தில் எனக்கு சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்லை! நாங்கள் கணவன் மனைவி இருவருமே நன்கு படித்ததோடு,நன்றாக உழைக்கிறோம்!ஓரளவுக்கு குடும்ப விவசாயம் இருக்கிறது! என் வீட்டுக்கு செய்ய வேண்டிய இயல்பான கடமைகளை எல்லாம் முடித்து விட்டேன்!அதனால் அரசியலுக்கு வந்தாலும் சுரண்டி பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மட்டுமல்லாது நம் மனசாட்சி இன்னும் உயிர்ப்போடு இருப்பது கூடுதல் தகுதி!அதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.

தகுதி இல்லாத எத்தனையோ பேர்,இந்த அரசியல் களத்தில் இடம்பிடித்து கொண்டு அசிங்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அருவருப்பு ஆக்குகிறார்கள். முதலில் அவர்களை அரசியல் களத்தில் இருந்து விரட்டவாவது,படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.படித்தவர்கள் செயல்பாட்டு அரசியல் கட்டத்துக்கு நகர தயாராக இல்லை என்றால், இந்த களம் சுத்தம் ஆகாது! மாற்றம் தானாக வராது!நாம் தான் வர வேண்டும்.

எனவே அரசியல் கழிசடைகளை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.இல்லாவிட்டால் இந்த கட்டப் பஞ்சாயத்து மனிதர்களும்,கொலைகாரனும், கொள்ளைக்காரனும், அடியாட்களும் அரசியல் களத்தில் இருந்து ஓய மாட்டார்கள். நாம் தான் அவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்.

என்னுடைய அனைத்து சூழலையும் கணக்கில் கொண்டு, அதன் எதார்த்தமான சாத்தியக் கூறுகளை மனதில் வைத்து தான், அண்ணா தி.மு.க கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் பதவிக்காக இருபத்து ஐந்து ஆயிரம் பணம் கட்டி விண்ணப்பித்து உள்ளேன். நாடாளுமன்ற வேட்பாளர் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் நேர்காணல் அனைத்தும் வெளிப்படையாக நடத்துவார்கள். காசு பணம், ஆள் பலம் இல்லாத சாதாரண தொண்டனுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக, எனக்கு அண்ணா திமுக மட்டுமே தெரிகிறது! எனக்கு வேறு வழி தெரியவில்லை மட்டுமல்லாது எனது சூழலில் நான் இன்னும் ஒரு கட்சிக்காக உழைத்து,என்னை அடையாளப் படுத்தி, காசு பணம் சேர்த்து தேர்தலை சந்திக்க இன்னும் பத்து முதல் இருபது வருடம் கூட ஆகலாம்.எனவே சிலவற்றை சமரசம் செய்து கொண்டு தான் விண்ணப்பித்து இருக்கிறேன் என்றார்.

ஒரு வகையில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு! அண்ணா திமுக குறித்து மிக நியாயமான விமர்சனங்களையும், குறைகளையும் தெரிந்தே அவர் அந்த கட்சியை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். தன் சுயமரியாதைக்கு பங்கம் வரும் என்பதை ஒப்புக் கொண்டே இருக்கிறார்! அனைத்தையும் வெளிப்படையாக பேசினார். நாம் எதையும் புதிதாக விளக்கி சொல்ல வேண்டியதில்லை.

இறுதியாக சொன்னேன்! உங்கள் கட்சி தேர்வில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது உங்கள் தனி நபர் சார்ந்த முடிவு.அதற்கான சூழலை நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்.உங்களுக்கு தெரிந்த வழியை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை.காலம் காலமாக அரசியல் பேசிக் கொண்டே இருப்பதற்கு பதிலாக, அதில் இறங்கித் தான் பார்ப்போமே என்று,நன்கு படித்த நீங்கள் தைரியமாக களம் இறங்கியதற்காக என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

உங்களின் இந்த செயல்பாடு படித்த இளைஞர்கள் பலருக்கு மிகுந்த உதேவகத்தையும்,மகிழ்ச்சியையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.உங்கள் இயல்புகளை நானறிவேன். பாதைகள் மாறினாலும் இலக்கும் நோக்கமும் இருவருக்கும் ஒன்றே! அது மக்களுக்கான உண்மையான அரசியல்! சமரசத்தின் அளவு என்ன என்பது தனி நபர்களுக்கு உட்பட்டது! எப்படியாயினும் உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

வேட்பாளர் தேர்வு முடியும் வரை பெயரை சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதற்காக இங்கே பதிவிடவில்லை!வேட்பாளர் நேர்காணல் முடிந்த பின்பு சுவராஸ்யமான தகவல்கள் வரும். அப்போது பெயரோடும் புகைப்படத்தோடும் பதிவிடுகிறேன்!

பி.எஸ். என். ஏ பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் பட்டியலில் இருந்து,நாடாளுமன்ற வேட்பாளருக்காக முதல் முறையாக களம் இறங்க ஆவலாய் காத்திருக்கும் ,என் அன்பு நண்பனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!நேர்காணலில் வெல்லுவதர்கான வாய்ப்பை இறைவன் அவருக்கு வழங்கினால் மிகுந்த மகிழ்ச்சி!

குறிப்பு: உண்மையில் நண்பர் அரசியல் குறித்து நல்ல புரிந்துணர்வு கொண்டவர். நண்பர்களுக்கேள்ளே நடக்கும் பல அரசியல் விவாதங்களில்,மிகத் தெளிவான கருத்துக்களை சுவாரஸ்யமாக முன் வைப்பவர்!

வாழ்த்துக்கள் நண்பா!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக