புதன், 15 ஜனவரி, 2014

தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்கள்!


பத்திரிக்கையாளர்கள்!

தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்கள் பலர், எதோ பெரிய ஜாம்பவான்கள் போல உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட சிலரை மட்டும் குறி வைத்து,ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்து தாக்கிவிட்டு, பார்த்தாயா எங்கள் வீரத்தை என்று எக்காளமிடவும் செய்கிறார்கள்.

உண்மையான செய்திகளை, எந்த பக்கசார்பும் இன்றி எழுதும் பத்திரிக்கையாளர்கள் எத்தனை பேர்? ஒரே செய்தியை, ஒவ்வொரு செய்தித்தாளிலும் வாசித்தால் வெவ்வேறு விதமாக,செய்தியே தலைகீழாக இருக்கும் அளவுக்கு வித்தியாசம் ஏன்?

கூடங்குளம் போராட்டத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றால், தினமலர் மட்டும் ஐநூறு பேர் என்று தான் எழுதுகிறான்.எங்கே இருக்கிறது உண்மையான செய்தி?

நான் கேட்பதெல்லாம் ஒன்று தான்.தமிழ்நாட்டில் முதுகெலும்புள்ள பத்திரிக்கையாளர்கள் என்று யாராவது ஒருவர் இருந்தால்,கரன் தாப்பரை போன்று அனல் பறக்கும் கேள்விகளை ஜெயலலிதா முன் வைக்க உங்களால் இயலுமா?

விஜயகாந்திடம் கேட்கும் குண்டக்க,மண்டக்க போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்பீர்கள் என்றால் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஜெயலலிதாவுடன் அப்படி ஒரு நேர்காணலை நடத்தி விட்டு, உங்களால் உயிரோடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? அப்படி ஒருவேளை கேடு விளையும் பட்சத்தில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக குரல் எழுப்ப இயலுமா உங்களால்?

உண்மையான பத்திரிக்கையாளன் என்றால், எல்லோருக்கும் பொதுவாக தானே நடந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவை பார்த்தால் மட்டும் பம்முவது ஏன்?

ஒருவேளை எந்த மாதிரியான கேள்விகளை, ஜெயலலிதாவிடம் கேட்பது என்று உங்களுக்கு தெரியாமல் இருந்தால் உதாரணத்திற்கு சில கேள்விகள்.

1. ஏன் நீங்கள் டான்சி வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்குகிறீர்கள்?

2. சட்டம் ஒழுங்கு குறித்து பேசும் நீங்களே சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடிப்பதில்லையே.பிறகெப்படி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்?

3. ஏன் வழக்கின் விசாரணைக்கு முட்டுகட்டையாகவும், அரசியல் காய்களை நகர்த்தி வழக்குரைஞர்களை மிரட்டவும் செய்கிறீர்கள்?

4. ஏன் டான்சி வழக்கை இருபது ஆண்டுகளாக நீட்டித்து கொண்டு இருக்கிறீர்கள்?

5. தருமபுரி வழக்கில் பொது சொத்துக்கான சேத தொகையை மருத்துவர் ராமதாசிடம் வசூலிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.மிகச்சரி. அதே சமயம் தருமபுரியில் கல்லூரி மாணவிகளை எரித்து கொன்ற அண்ணா தி.மு.க கட்சிக்காரகளுக்கு என்ன நீதி?

6. ஆட்சியாளர்களை எதிர்த்து சினிமா எடுத்தால் ஏன் மிரட்டலும் தடையும் தொடர்கிறது?

7. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்று பெருமை பேசும் நீங்கள், ஏன் விஜயகாந்த் மற்றும் மாற்று காட்சிகளில் இருந்து ஆட்களை விலைக்கு வாங்குகிறீர்கள். இது அசிங்கமாக இல்லையா?

8. இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் என்றால் போராடும் மக்களுக்கு ஒரு வாக்குறுதியும், தேர்தல் முடிந்தால் அடக்கு முறையும் என்றும் ரெட்டை வேடம் தரிப்பது ஏன்?

9. சட்டமன்றத்தில் உங்கள் சகாக்கள் ஏன் தொடர்ந்து மேஜையை தட்டுவதில் மட்டும் முனைப்பாய் செயல்படுகிறார்கள்?அதை தவிர வேறெதுவும் அவர்களுக்கு தெரியாதா?

10. ஐந்தாண்டுகளில் ஏன் ஐம்பது முறை அமைச்சரவை மாற்றம் செய்கிறீர்கள்? ஏன் எந்த அமைச்சருக்கும் எதுவும் தெரிவதில்லையா? அல்லது செயல்பட தகுதியற்றவர்களை தான் தேர்வு செய்கிறீர்களா?

11. ஏன் அனைத்து துறை சார்ந்த கேள்விகளுக்கும், சம்மந்தப்பட்ட உங்கள் அமைச்சர்கள் பதில் சொல்லுவதற்கு பதிலாக நீங்களே எல்லா துறைக்கும் பதில் சொல்லுகிறீர்கள்? அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாதா?

12. மின்வெட்டு பிரச்சினையை ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் தீர்த்து வைப்பேன் என்ற பொய்யான வாக்குறுதியை தந்து தானே ஆட்சியை பிடித்தீர்கள்.ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்றாச்சே. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுக்கும் மேலாகியும் கூட மின்வெட்டு தீர்ந்தபாடில்லை. அப்படியானால் இது மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடி இல்லையா? பொய் வாக்குறுதிகளுக்கான தண்டனை என்ன?

13. ஆட்சிக்கு வந்த பிறகு அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்று சொன்ன நீங்கள் ஏன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களையே சந்திப்பதில்லையே ஏன்?

14. கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, ஆயிரத்து ஐநூறு கோடிக்கும் மேலாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்துக்குள் நுழையமாட்டேன் என்று சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்வது ஏன்?மருத்துவமனையாக்குவேன் என்கிறீர்களே, அந்த அளவுக்கு மக்கள் நலனில் அக்கறையா?

15. தெற்காசியாவின் பெரிய நூலகங்களுள் ஒன்றான கோட்டூர்புரத்தின் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கியே தீருவேன் என்று அடம்பிடிக்க காரணம் என்ன?மருத்துவமனைகள் மீது காதலா?

16. அண்ணா பல்கலைகழகத்தை அபகரித்து அங்கு தான் புதிய சட்டசபை அமைப்பேன் என்று கடந்த ஆட்சியின் போதும் அடம் பிடித்தீர்களே,அடிக்கல் நாட்டினீர்களே..ஏன் இந்த கொலை வெறி?

17. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தான் சிறப்பாக இருக்கும் என்று கருணாநிதி சொன்னால், இல்லை இல்லை நான் மோனோ ரயில் திட்டம் தான் கொண்டு வருவேன் என்று அடம் பிடிப்பதேன்?கருணாநிதி எது செய்தாலும் அதற்கு எதிராக தான் நான் செய்வேன் என்பது என்னவகையான மனநிலை?மக்கள் நலன் சார்ந்த சிந்திக்க வேண்டுமா அல்லது கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்பது தான் நோக்கமா?

18. சமச்சீர் கல்வி திட்டத்தை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்தார்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே , உடனே அதற்கு தடை விதிப்பது சிறு பிள்ளை தனமாக இல்லையா?

19. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எங்கு சென்றாலும் தனி விமானசேவை, அளவுக்கு அதிகமான ஆடம்பர செலவுகள் என்று மக்கள் வரிப்பணத்தை இந்த அளவுக்கு வீணடிக்கலாமா? மக்களின் பிரதிநிதி மக்களை போலவே எளிமையாக இருக்க வேண்டாமா?

20. உங்கள் ஆட்சியில் மட்டும் காவல்துறையின் அடாவடித்தனங்கள் அதிமாக இருக்கிறதே..அதை ஏன் முறைப்படுத்த முயலுவதில்லை?

21. சென்னாரெட்டி போன்ற ஆளுநர்களை எல்லாம் ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் அவமானப் படுத்தினீர்களே, இவை எல்லாம் ஒரு மாநில முதல்வருக்கு அழகா?

22. நாட்டில் மதுக்கடைகளை இந்த அளவுக்கு திறந்து விட்டிருப்பதோடு,அதை மென்மேலும் விரிவு படுத்தும் திட்டம் கொண்டுள்ள நீங்கள், இந்த சமூகம் குறித்த அக்கறையோ கவலையோ இல்லாதவரா? மும்பை போலவே தமிழ்நாட்டிலும் விபச்சாரத்தையும், வேசித்தனத்தையும் சட்டப்படி அமுல்படுத்தும் உயர்ந்த திட்டங்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா?

23. எங்கு பார்த்தாலும் இலவசம் என்று சொல்லி மக்களை சொம்பேறியாக்குவதும், ஏமாற்றுவதும் என்ன வகையான அரசியல்?

24. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும்,இடைத்தேர்தல் என்றால் தொகுதியே திருவிழாகோலம் பூணுவதும் அசிங்கமானதாக தெரியவில்லையா?

25. குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்கிறார்களே,அப்படியானால் வரும் காலங்களில் உங்களுக்கும் தேர்தலில் போட்டியிட தடை வருமா?

இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கும் தைரியமான பத்திரிக்கையாளர்கள் இருந்தால் பாராட்டுக்குரியவர்கள்.

மற்றபடி புதியதலைமுறை தொலைக்காட்சியில் வேலை செய்வதாக சொல்லிக்கொண்டு, பச்சமுத்து பாரிவேந்தனின் அட்டூழியங்களையும், வருமானவரி துறை முறைகேடுகளையும் கூட, தங்கள் தொலைக்காட்சியில் விவாதிக்க இயலாதவர்கள், நாங்களும் பத்திரிக்கையாளர்கள் தான் என்று சொல்லிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது?


-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக